கே.என்.நேரு.. வாந்தி.. விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பஸ் கட்டண உயர்வு விஷயத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், எடுத்த வாந்தியை மீண்டும் எடுக்கச் சொல்வது சரியல்ல என அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அரசுப் பேருந்துகளுக்கு மறைமுகமாக கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக கட்சித் தலைவர் விஜய்காந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதே கருத்தை தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கையாக வெளியிட்டார். அதற்கு நானும் பதிலளித்தேன்.

அந்த அறிக்கையை, விஜயகாந்த ஒரு முழுநேர அரசியல்வாதியாக இருந்தால் படித்திருப்பார். அப்படி படித்திருந்தால் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்க மாட்டார். ஜெயலலிதா மட்டுமல்ல, விஜயகாந்த்தும் 2 மாதங்களுக்கு முன்பு இதே கருத்தை வெளியிட்டு அதற்கும் பதில் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கு நான் மீண்டும் விளக்கம் தருகிறேன்.

மறைமுக பஸ் கட்டண உயர்வை குறைக்காவிட்டால் போராட்டம் என்று கூறுகிறார். மறைமுகமாக எதையும் வாங்குபவர்களுக்கு பஸ் கட்டணத்தை கூட மறைமுகமாக வாங்குவார்கள் போலும் என நினைக்கத்தான் தோன்றும்.

பயணிகளிடமிருந்து கட்டணத்தைப் பெறும்போது மறைமுகமாக வாங்க முடியாது. கடந்த 13-05-2006 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் திமுக அரசு எந்தப் பேருந்து கட்டணத்தையும் உயர்த்தவில்லை என்பதுதான் உண்மை. கடந்த ஆட்சியில் என்ன கட்டணம் விதிக்கப்பட்டதோ, அதே கட்டணம் தான் இப்போதும் உள்ளது.

விஜயகாந்த தனது அறிக்கையில், முதலில் சாதாரண பேருந்துகளும், விரைவு பேருந்துகளும் தான் இருந்தன. ஆனால் இப்போது சொகுசு பஸ், எம் சர்வீஸ், எல்எஸ்எஸ் சர்வீஸ், எல்லோ லைன், ப்ளூ லைன் என்று கலர் கலராக விடப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் 2,100 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இப்போது மக்களின் தேவைகளை உணர்ந்து 2,450 பேருந்துகள் விடப்பட்டுள்ளன.

மக்களின் நன்மைக்காக புதுமைகளைச் செய்வது என்றாலே சிலருக்கு வேப்பங்காயை கடிப்பது போலிருக்கிறது.

அதேபோல் பஸ் கட்டணச் சலுகை பெற்ற மாணவர்கள் ஒரு சில பேருந்துகளில் மட்டும் தான் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். சொகுசு பஸ்களைத் தவிர அனைத்து பேருந்துகளிலும் இலவச பஸ் பாஸ் பெற்றவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சொகுசுப் பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க மறுத்தது கூட கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தான். அதைத்தான் கடைபிடித்து வருகிறோம்.

மகளிர்க்கு மட்டும் என்ற பேருந்தே கண்ணில் தெரியவில்லை என்கிறார். வீட்டில் அறைக்குள் இருந்து கொண்டு பார்த்தால் மகளிர்க்கு மட்டும் என்ற பேருந்து கண்ணுக்கு தெரியாது. சுவர் தான் தெரியும். வெளியே சாலையில் போய் பார்த்தால் அல்லவா அதை பார்க்க முடியும். ஒரு நாளைக்கு 200 நடைகள் மகளிருக்கு மட்டும் பேருந்து இயக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சாதாரண பஸ்ஸில் எம் சர்வீஸ் என்று எழுதிவிட்டு கட்டணம் ரூ.2லிருந்து ரூ.3ஆக உயர்த்தியுள்ளார்கள் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார். முதலில் எடுத்த வாந்தியை மீண்டும் மீண்டும் எடுக்க சொல்வது சரியல்ல.

இதே கேள்வியைத்தான் கடந்த பிப்ரவரியில் கேட்டார். இதற்காக அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் மீண்டும் விளக்கம் தருகிறேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எம் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடந்த ஆட்சியிலிருந்து (04-10-2001 முதல்)எம் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

நடிகராக இருந்து, நடிகர் சங்கத் தலைவராக இருந்து, பின்பு புதிதாக கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர நினைக்கும் விஜயகாந்த், தான் நினைப்பதையெல்லாம் அறிக்கையாக விடக்கூடாது. தனக்கு உண்மை தெரியாவிட்டால், அரசியல் தெரிந்தவர்கள் யாரிடமாவது விவரங்களை கேட்ட பின்பு அறிக்கை வெளியிடுவது அவருக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது. இல்லாவிட்டால் கதை அளக்கிறார் விஜயகாந்த் என்ற பெயர் நிரந்தரமாக அவருக்கு நிலைத்துவிடும்.

எனவே தேவையில்லாத போராட்டத்தை விஜயகாந்த் ஒத்தி வைத்து விட்டு, தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியிடப்படும் போதெல்லாம் கட்டண உயர்வு செய்கிறார்களே, அதை எதிர்த்து வேண்டுமானால் விஜயகாந்த் போராட்டம் நடத்தலாம் அல்லது போராட்டம் நடத்த முன் வருவோருக்காவது துணையாக நிற்கலாம் என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+