100 சி.சிக்கு குறைவான வாகனங்களுக்கு ஹெல்மெட் விலக்கு-தமிழக அரசு பரிசீலனை
சென்னை:தமிழகத்தில், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அரசு தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. தவறு செய்வோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என உத்தரவிட கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது இதுதொடர்பாக சட்டம் கொண்டு வரப்படும் என அரசு உறுதியளித்தது. அதன்படி கட்டாய ஹெல்மட் சட்டமும் கொண்டு வரப்பட்டது. முதலில் சென்னை உள்ளிட்ட 6 மாநகரங்களிலும் பிறகு மாநிலம் முழுவதும் இது அமல்படுத்தப்பட்டது.
சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளில் மிகக் கடுமையாக இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தியது. ஹெல்மட் அணியாமல் சென்றவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து அபராதம் விதித்தனர், சிலரை கோர்ட்டுக்கும் அழைத்துச் சென்றனர்.
இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவதை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கட்டாய ஹெல்மட் சட்டம் படிப்படியாக சத்தமிழந்து போனது. இந்த நிலையில் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி உள்ளிட்ேடார் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இதுெதாடர்பாக டிராபிக் ராமசாமி மற்றும் வக்கீல் லட்சுமிநாராயணன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்டாய ஹெல்மெட் உத்தரவை ஏன் உறுதியாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசை கேட்டது. மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த உத்தரவு கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
முதல் முறையாக பிடிபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. 2 முறைக்கு மேல் தவறு செய்வோர் மீது வழக்கும் விதிக்கப்படுகிறது. கட்டாய ஹெல்மட் உத்தரவை அரசு கடுமையாக கடைப்பிடித்து வருகிறது.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் டர்பன் கட்டிச் செல்வோருக்கு ஹெல்மெட் அணிய தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
அதேபோல் உடல் ஊனமுற்றோர், தொப்பி அணியும் முஸ்லீம்கள், மூத்த குடிமக்கள் மற்றும் 100 சி.சிக்கு கீழுள்ள வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க அரசு பரிசீலித்து வருகின்றது என்பதால் இந்த பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இளங்கோ வாதாடினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசு உத்தரவை எதிர்த்து ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பின்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என்று 2 வாரத்திற்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications