தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தஅமெரிக்க அதிகாரியால் பரபரப்பு
சென்னை:துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்த அமெரிக்க ராணுவ அதிகாரியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து பாரீஸ் செல்ல ஏர் பிரான்ஸ் விமானம் தயாராக இருந்தது. பயணிகளின் உடமைகள் மற்றும் பாஸ்போர்ட், விசா சோதனைகள் நடந்து கொண்டிருந்தன.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக ஒவ்வொரு பயணியையும் தீவிரமாக சோதித்தனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற பயணியின் பெட்டியை சோதித்தபோது வெடிபொருட்களை அறியும் கருவியிலிருந்து பீப் ஒலி எழுந்தது.
இதையடுத்து ரிச்சர்டை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, தான் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி என்றும், சூட்கேஸில் எந்த ஆபத்தான பொருட்களும் இல்லை என்றும் கூறினார்.
இருப்பினும் சூட்கேஸைத் திறந்து பார்த்தனர் அதிகாரிகள். அப்போது அதில், பதினைந்து .22 ரக துப்பாக்கித் தோட்டாக்கள், ஐந்து 9 எம்.எம். ரக துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரிச்சர்டிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அமெரிக்காவில் இதுபோல எடுத்துச் செல்லலாம். அங்கு தடை ஏதும் கிடையாது. எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசன்ஸ் உள்ளது. எனவேதான் இங்கும் அதுபோல எடுத்து வந்தேன் என்றார்.
அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள், இந்தியாவில் இதுபோல துப்பாக்கித் தோட்டாக்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது என்று கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுத்தார் ரிச்சர்ட். அதன் பிறகே அவரை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications