மதிமுக அபார வளர்ச்சியடைந்துள்ளது- வைகோ
கோயம்புத்தூர்:விழுப்புரம் மற்றும் கோவை மண்டல மாநாட்டிற்கு பிறகு மதிமுக அதிக வலுப்பெற்றுள்ளது. எங்களுடைய கட்சியில் சேதாரம் கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இன்று கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கோயம்புத்தூர், விழுப்புரத்தில் நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டிற்கு பிறகு எங்கள் கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. மதிமுகவின் அடுத்த மண்டல மாநாடு மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகளில் அநியாய கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசு அதிக கட்டணத்தை கண்காணிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. கட்டண வசூலை பற்றிக் கேட்டால், இதெல்லாம் வெறும் டியூசன் பீஸ் தான் என்று சொல்கிறார்கள்.
அணு ஆயுத ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் வகையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சரியான நேரத்தில் அவர்கள் மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள்.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் காட்டமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. ஆற்காடு வீராசாமி வெளியிட்ட கருத்து அவர் விரக்தியில் சொன்னது என்று முதல்வர் கூறியுள்ளார். விரக்தி ஆற்காட்டாருக்கா அல்லது கருணாநிதிக்கா?
சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டம். இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிற வகையில் மத உணர்ச்சிகளை தூண்டிவிடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.
தமிழகத்தில் காவல்துறை முழுவதுமாக நம்பிக்கையை இழந்துவிட்டது. அதிகாரிகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட முடியாத நிலை உள்ளது. இது போன்ற நிலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
மதிமுக நன்கு வலுப்பெற்றுள்ளது. எங்கள் கட்சியில் சிறிதும் சேதாரம் கிடையாது. மதிமுகவை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. மதிமுக-அதிமுக கூட்டணி சிறப்பாக இருக்கிறது என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications