ஹைதராபாத் குண்டுவெடிப்பு: வங்கதேச பெண் கைது
ஹைதராபாத்ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 25ம் தேதி இரவு ஹைதராபாத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷபீரா சஞ்சனி. ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியான சார்மினார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார் ஷபீரா. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ஷபீராவைக் கைது செய்தனர். ஷபீரா ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரிடமிருந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் பாஸ்போர்ட் எதுவும் அவரிடம் இல்லை.
அவரது குடும்பத்தினரைத் தேடி போலீஸார் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து ஷபீராவின் குடும்பத்தைச் சேர்ந்த நசீம் குவாசி, அபதீன் குவாசி, ரிஸ்வான் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்ேதகிக்கின்றனர். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஹைதராபாத் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாக சந்தேகிக்கப்படும் ஷாஹித் என்கிற பிலால் குறித்து போலீஸாருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவன்தான் ஹைதாரபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளான். பிலால் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன் ஆவான்.
6 வருடத்திற்கு முன்பு ஹைதராபாத் சாய்பாபா கோவிலில் குண்டுவெடித்தது. அதற்கும் பிலால்தான் காரணம். அந்த சம்பவத்திற்குப் பிறகு பிலால் தப்பி விட்டான். பாகிஸ்தானில் இருந்தபடி தற்போது செயல்பட்டு வருகிறான். அடிக்கடி வங்கதேசத்திற்கும் அவன் வந்து செல்கிறான்.
லஸ்கர் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளுடன் அவனுக்குத் தொடர்பு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வங்கதேசத்திலிருந்து 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை இந்தியாவுக்குக் கடத்தி வர இவன் தான் காரணமாக இருந்துள்ளான். இதை வைத்துத்தான் ஹைதராபாத் உள்ளிட்ட சம்பவங்களை அவன் நடத்தியுள்ளதாக ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications