தேனிலவுக் கொலை: வித்யா, ஆனந்த்துக்குஇரட்டை ஆயுள் - அன்புராஜுக்கு ஆயுள்
தொடுபுழா (கேரளா):பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மூணாறு தேனிலவுக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வித்யாலட்சுமி, ஆட்டோ டிரைவர் ஆனந்த் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஆனந்த்தின் நண்பர் அன்புராஜுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
![]() |
சென்னை பம்மலைச் சேர்ந்த வித்யா என்கிற வித்யாலட்சுமிக்கும், அனகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்தராமனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்கு முன்பே ஆட்டோ டிரைவர் ஆனந்த்தை, வித்யா காதலித்து வந்தார்.
இந்தக் காதலை ஏற்காத வித்யாவின் குடும்பத்தார், வித்யாவை, ஆனந்தராமனுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் ஆனந்தராமனை கணவராக ஏற்க வித்யாவுக்கு மனம் வரவில்லை. இதனால் அவரைக் கொலை செய்யத் தீர்மானித்தார்.
இதையடுத்து தனது காதலர் ஆனந்த்திடம் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் கணவர் ஆனந்தராமனுடன் மூணாறுக்குத் தேனிலவுக்குக் கிளம்பினார். அவர்களைத் தொடர்ந்து ஆனந்த்தும், தனது நண்பர் அன்புராஜுடன் மூணாறு வந்தார்.
அங்குள்ள குண்டலா ஏரிப்பகுதியில், வித்யா போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி ஆனந்தராமனை ஆனந்த்தும், அன்புராஜும் கொலை செய்தனர். பின்னர் தனது கணவரைக் கொன்று விட்டு சிலர் நகையைத் திருடிக் கொண்டு போய் விட்டதாக நாடகமாடினார் வித்யா.
![]() |
ஆனால் சில மணி நேரங்களிலேயே உண்மை வெளியானது. வித்யாவின் திட்டப்படிதான் ஆனந்தராமன் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் ஆனந்த் முதல் குற்றவாளியாகவும், அன்புராஜ் 2வது குற்றவாளியாகவும், வித்யா 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.
3 பேர் மீதும் தொடுபுழா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 73 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். வித்யா, ஆனந்த் மற்றும் மூணாறு ஆட்டோ டிரைவர் ஆகியோரின் செல்போன்களும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டன. இந்தியாவிலேயே மின்னணுப் பொருள் ஒன்று கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சாட்சியத்தை கோர்ட்டும் ஏற்றுக் கொண்டது.
![]() |
51 சாட்சிப் பொருட்கள் உள்பட 80க்கும் மேற்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
3 பேரும் கைது செய்யப்பட்ட 88வது நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கைதான 3 பேருக்கும் இறுதி வரை ஜாமீனே கிடைக்கவில்லை.
கடந்த 2 மாதங்களாக தொடுபுழா கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்த வழக்கின் முடிவில் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி ஜனார்த்தனன் தீர்ப்பளித்தார். இதைக் கேட்டதும் வித்யா உள்ளிட்ட 3 பேரும் கண்ணீர் விட்டுக் கதறியழுதனர்.
நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி தொடுபுழா கோர்ட்டில் வித்யா உள்ளிட்ட 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிக்கும் முன்பு இரு தரப்பு வக்கீல்களின் வாதங்கள் நடந்தன.
அரசு வக்கீல் சாஜி குரியன் கூறுகையில், ஆனந்தராமன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாட்சியங்களும் வலுவாக உள்ளன. எனவே வித்யா உள்ளிட்ட குற்றவாளிகள் 3 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.
வித்யாலட்சுமி, ஆனந்த், அன்புராஜ் சார்பில் ஆஜரான வக்கீல்கள், குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரினர். தண்டனையை கேட்பதற்காக வந்திருந்த வித்யா கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார். மற்ற இருவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.
ஆனந்தராமனுடன் தேனிலவுக்கு வந்தபோது அணிந்திருந்த அதே உடையில் வித்யா வந்திருந்தார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு பருமனுடன் இருந்த வித்யா தற்போது மிகவும் மெலிந்து போயுள்ளார்.
பின்னர் நீதிபதி ஜனார்த்தனன் தண்டனை விவரத்தை அறிவித்தார். வித்யா மற்றும் ஆனந்த்துக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அன்புராஜுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.
வித்யாவுக்கான தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனந்த்துக்கு ஆயுள் தண்டனை தவிர ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
2வது குற்றவாளியான அன்புராஜுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், சங்கிலி திருடிய வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வித்யாவுக்கு முதல் ஆயுள் தண்டனையுடன் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். இன்னொரு ஆயுள் தண்டனையுடன் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் 3 ஆண்டுகள் கூடுதலாக சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
இதுவரை அவர் சிறையில் இருந்த காலம் தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.
தீர்ப்பைக் கேட்டதும் வித்யாவும், ஆனந்த்தும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும், 3 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் திருவனந்தபுரம் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளதாக வித்யா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களுக்கு கண்டனம்:
தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி, குற்றவாளிகளின் பெற்றோர்களின் போக்கையும் கண்டித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், குழந்தைகளை சரிவர வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. அவர்கள் தங்களது கடமையிலிருந்து தவறுவதால்தான் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன.
குழந்தைகள் என்ன செய்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், படிக்கிறார்களா அல்லது படிக்கும் போர்வையில் வேறு எதிலும் ஈடுபடுகிறார்களா, அவர்களின் மன நிலை என்ன என்பதை பெற்றோர்கள் கண்காணித்து வர வேண்டும்.
அதை தெரிந்து கொள்ள தற்போதைய பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, கவலைப்படுவதில்லை. குழந்தைகள் மனில் உள்ளதைக் கண்டுபிடித்து அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்தக் குற்றத்தைத் தவிர்த்திருக்கலாம்.
இது அபூர்வமான கொலை வழக்கு அல்ல. சாதாரணமானதுதான். எனவே குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டிய தேவையில்லை என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.















Click it and Unblock the Notifications