குடும்பத்தின் இருளை அகற்ற வெளிநாடு<br>போய் விழியிழந்து திரும்பிய இளைஞர்கள்!
செங்கோட்டை:
குடும்பத்தின் வறுமையை விரட்டி, வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்காக வெளிநாடு போன இரு இளைஞர்கள் பார்வை பறி போய் பரிதாபமாக ஊர் திரும்பியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர் முத்துகிழவியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் வேலுச்சாமி மகன் சரவணன், முருகையா தேவர் மகன் முருகேஷ் என்ற இருளப்பன்.
2 பேரும் அரபு நாடான துபாய் அல்கூஸ்-சோனாப்பூர் என்ற பகுதியில் "ALROSTAMANI PEGEL L.L.C" என்ற கட்டுமான நிறுவனத்தில் கொத்தனார் பணி செய்து வந்தனர்.
சரவணன் இதே நிறுவனத்தில் "மெஸைன்மெண்ட்" சூப்பர்வைசராகவும், இருளப்பன் கொத்தனாராகவும் பணி புரிந்துள்ளனர். இதில் இருளப்பன் 10-4-2005-ல் தான் துபாய்க்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற இருளப்பனுக்கு அடிக்கடி கடும் வெயில் கொடுமையின் காரணமாக தலைசுற்றல் வருமாம். இதற்காக அவருக்கு மாத்திரை கொடுப்பார்களாம். அந்த மாத்திரை தொடக்கத்தில் இனிப்பாகவும், பின்னர் கசப்பாகவும் மாறி விடுமாம்.
தொடர்ந்து தலை சுற்றல் வரும்போதெல்லாம் இந்த மாத்திரையை இருளப்பன் சாப்பிட அதுவே பின்னாளில் வயிற்று வலியில் கொண்டுபோய் வலிப்பு நோயை வரவழைத்துள்ளது.
கடும் வேலையினாலும், அங்குள்ள கெமிக்கல் செங்கற்கள், கான்கீரீட் கலவை போன்றவை மற்றும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாலும் கண் பார்வை நாளுக்கு நாள் குறைந்து வந்துள்ளது.

இதையடுத்து ருளப்பன் 28-10-2005ல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது பல டெஸ்ட்டுகள் எடுத்த பார்த்துள்ளனர். பின்னர் பிரச்சினை எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் நாளுக்கு நாள் பார்வை குறைவு ஏற்பட்டு இடது கண் பார்வை முற்றிலுமாக பறிபோய் விட்டது. இதையடுத்து 10-3-2006-ல் ஊர் திரும்ப முடிவு செய்து திருவனந்தபுரம் வந்து இறங்கியவர் சொந்த ஊருக்கு திரும்பாமல் அங்கேயே கூலி வேலைக்கு போய் சாப்பிட்டு தெருவோரத்தில் படுத்து உறங்கி வந்துள்ளார்.
பின்னர் குருவாயூருக்கு சென்று அங்கே கண் பரிசோதனை செய்துள்ளார். அவர்களும் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் நாட்கள் ஆக ஆக இருளப்பனின் இரு கண்களும் முற்றிலும் பார்வை இழந்தன.
இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் தனது வீட்டு தொைலபேசி எண்ணைக் கொடுத்து தகவல் தெரிவிக்க கூறியுள்ளார் இருளப்பன். தகவல் அறிந்ததும் பதறிப் போன குடும்பத்தினர் இருளப்பனை ஊருக்கு அழைத்து வந்தனர்.
ஒன்றரை வருடம் கேரளாவிலேயே சுற்றியவர் இப்போது நடைபிணமாய் தன் வீட்டு பெஞ்சில் வாழ்ந்து வருகிறார். இது குறித்து அவரது சகோதரர் ஜோதிமணி கூறியதாவது, 80 ஆயிரம் செலவு செய்து அனுப்பி வைத்தேன். 40 ஆயிரம் கடன் இன்னும் இருக்கு.
இந்நிலையில் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு போனால் என்ன நடக்குமோ என்று பயந்து போய் இவன் தகவலை சொல்லாமல் கண்பார்வை இல்லாமல் திரும்பிவிட்டான். நல்லவேளை என் தம்பி கிடைத்ததே இறைவன் அருள்தான் என்றார் கண்ணீர் மல்க..!
இவர் கதை இப்படி என்றால் சரவணன் கதை அதை விட சோகமானது.
அதை சரவணனே சொல்கிறார், நான் 2-வது முறை வெளிநாட்டுக்கு போய் விட்டு வரும்போது கண் பார்வை குறைவது போலத் தெரிந்தது. திருநெல்வேலியில் போய் சிகிச்சை பெற்று மீண்டும் துபாய் போனேன்.
அங்கு எனக்கு வேலை "மெஸைன் மெண்ட்" பார்ப்பது தான். நாட்கள் நகர நகர மீண்டும் கண் கோளாறு செய்ய தொடங்கியது. முதலில் வலது கண் கோளாறு செய்ய தொடங்கியது. பின் இரு கண்களும் பாதிக்கவே சில மாதத்திலேயே திரும்பிவிட்டேன்.
எப்படி எனக்கு கண் பார்வை இப்படி ஆனது என்று தெரியவில்லை. எனக்கு அதிகபட்சம் 5 அடி தூரம் வரைதான் பார்வை தெரிகிறது என்று கூறி கண் கலங்கினார்.
சரவணனுக்கு ஐயம்மாள் என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி இரண்டரை வருடம்தான் ஆகிறது. தற்போது திருநெல்வேலியில் கண் பரிசோதனை செய்து வருகிறார். விரைவில் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் கூறினார்.
இவரது தந்தை வேல்சாமி கூறுகையில், என் குடும்பமே இவனை நம்பிதான் உள்ளது. எனக்கு 65 வயதாகிவிட்டது. இறைவன் ஏன் எங்களை இப்படி சோதிக்கிறான் என்றார் கதறி அழுதபடி.
குளுமையான பூமியிலிருந்து பல ஆயிரங்கள் கடன் வாங்கி பாலைவன தேசத்திற்கு சென்று வறுமை இருளை விரட்டி குடும்பத்தில் வெளிச்சக் கீற்றை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு சென்ற இந்த இரு இளைஞர்களின் கண் பார்வை இழந்து, அவர்கள் வாழ்க்கையும் இருண்டு, விரக்தியான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது அப்பகுதியினருககு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு அப்பாவி இளைஞர்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோருகின்றனர்.
விழி இழந்து திரும்பியுள்ள இவர்களுக்கு அரசு ஏதாவது வழி காட்டுமா?












Click it and Unblock the Notifications