பகையைக் கக்கினால் தமிழைக் காக்க முடியாது - கருணாநிதி
சென்னை: தமிழைக் காப்பதாக கூறி ஒருவருக்கொருவர் பகையைக் கக்கிக் கொண்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
2006ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா 68 பேருக்கு விருதினை வழங்கினார். முதல்வர் கருணாநிதி பொற்கிழிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், திமுக ஆட்சி தொடங்கிய பிறகு அண்ணாவுடைய தலைமையிலே நீண்ட காலமாக நம்முடைய கோரிக்கையாக இருந்த தமிழ்நாடு என்கிற பெயரை அண்ணா சட்டப் பேரவையிலே எடுத்துச் சொல்லி அதற்காக காங்கிரஸ் கட்சியின் தியாகி, சங்கரலிங்கநாடார் 60 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று கேட்ட அந்தக் கோரிக்கையை அண்ணா நிறைவேற்றினார்.
கட்சி வித்தியாசம் இல்லாமல், சட்டப் பேரவையிலே தமிழர்கள் என்கிற ஒரே நிலையிலே அமர்ந்திருந்தபோது அண்ணா எழுந்து நின்று சொன்னார், நான் தமிழ்நாடு என்று பெயர் வைத்ததை யாராலும் மாற்ற முடியாது. அவர்களை காலம் தண்டிக்கும், அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விடமாட்டார்கள் என்று சொன்னார்.
தான் முதல்வர் என்பதை மறந்து அண்ணா அந்த அவையிலே சொன்னார், நான் 3 முறை தமிழ்நாடு என்று சொல்வேன். நான் சொல்லும் ஒவ்வொரு முறையும் நீங்கள் வாழ்க, வாழ்க என்று சொல்லவேண்டும் என்று கூறிவிட்டு, அண்ணா சட்டப்பேரவையிலே 3 முறை தமிழ்நாடு என்று சொல்ல, உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க, வாழ்க என்று ஒலித்த அந்த ஒலி இன்றும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படி பெயர் சூட்டப்பட்ட இந்த மாநிலம் இங்கே தமிழை உயர்ந்த முறையில், அதை நாம் செங்கோலோச்சுகின்ற முறையிலே நடத்திட வேண்டாமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்திட ஏறத்தாழ நூறாண்டு காலமாயிற்று.
செம்மொழி தகுதி நம் தமிழுக்கு கிடைத்திருக்கும் போது, அந்தத் தமிழால் நம்முடைய மன்றத்தை, இசைவாணர்களை, கலைவாணர்களை பாராட்ட, புகழ அவர்களுக்கெல்லாம் மேலும் ஊக்கத்தை வழங்க அவர்களில் பலர் இயக்குநர்களாக நம்முடைய ராம. நாராயணனைப் போல இருக்கிறார்கள்.
இப்படி இருக்கின்றவர்களையெல்லாம் சிறப்பிக்க அவர்களையெல்லாம் உயர்த்த இந்த சங்கத்திற்கு, சபாவிற்கு மன்றம் என்று பெயரிடுவதா அல்லது வேறு பெயர் வைப்பதா என்று எண்ணிய போது, நான் இந்த மன்றத்திலே உள்ள நண்பர்களையெல்லாம் அழைத்து பேசினேன்.
அவர்களிடம் நான் கேட்டுக்கொண்டதன் பேரில், இயல், இசை, நாடகம் இந்த மூன்றும் நம்முடைய தமிழுக்கே பெருமையளிக்கக் கூடியதாகும். ஆகவே இந்த மூன்றையும் சேர்த்து இயல், இசை, நாடக மன்றம் என்று பெயர் வைக்கலாமா என்று கேட்டேன். அவர்களும் அதற்கு முழு மனதோடு ஒத்துக்கொண்டார்கள்.
அன்று முதல் இன்றுவரை இயல், இசை, நாடக மன்றமாக விளங்கி வருகிறது. இந்த மன்றத்தின் சார்பாக பலர் இன்றைக்கு பாராட்டப்பட்டிருக்கிறார்கள், சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள், பலர் இதற்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நம்முடைய இயக்குநர் பார்த்திபனை நன்றி சொல்ல சொன்னால், அவர் தமிழ்நாட்டையே நான் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன் என்று நமக்கு தெரியாமலேயே எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
பல பேர் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டு போக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பார்த்திபன் உட்பட தமிழர்கள் அவ்வளவு பேரும் ஏமாளிகள் அல்ல என்பதை எடுத்துக்காட்ட இங்கே விரும்புகிறேன். அவர் நன்றி கூறியது எனக்கு. ஆனால் நான் அந்த நன்றியை எனக்கு கூறியதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 1967ல் இதே மேடையில் அண்ணா எனக்கு இந்த பட்டத்தை கொடுத்து ஆளாக்கியதற்காக அவருக்கு தான் இந்த நன்றி சேரும்.
இன்று தமிழை காப்பாற்ற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய கட்டம் தமிழர்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. தமிழை பாதுகாப்பதாக சொல்லிக் கொண்டு தமிழுக்கு நாங்கள் தான் காப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு அந்த பெருமையிலே நாம் ஏமாந்து விடக் கூடாது, ஏமாற்றி விடக் கூடாது.
எல்லோரும் சேர்ந்து தமிழைக் காப்பாற்ற ஒருவருக்கொருவர் பகையை கக்கி தமிழை காப்பாற்ற முடியாது. எனவே உள்ளுணர்வோடு யோசித்து அந்த உணர்வை பயன்படுத்தி, அந்த வகையில் தமிழ் வாழ வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications