ஆந்திரா-ஒரேநாளில் 4 விபத்துக்களில் 22 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இன்று நடந்த சாலை விபத்துக்களில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
முதல் விபத்து-8 பேர் பலி:
கர்னூல் மாவட்டத்தில் உள்ள உலின்டகொண்டா கிராமத்தில் காலி பாட்டில்களை ஏற்றி வந்த லாரி வளைவு ஒன்றில் திரும்பும் போது கவிழ்ந்தது. இதில் லாரியின் மீது பயணம் செய்த 4 பெண்கள், 3 பேர் குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
2வது விபத்து- 7 பேர் பலி:
மெடக் மாவட்டத்தில் உள்ள ஜீடிப்பள்ளி கிராமத்தின் அருகே எதிரே வந்த லாரியின் மீது, பசாராவில் இருந்து சென்ற வேன் நேருக்கு நேராக மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர்.
6 பேர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஜாம்பாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் இறந்துவிட்டனர்.
3வது விபத்து- 6 பேர் பலி:
கம்மம் மாவட்டத்தில் உள்ள கொட்டலன்கபள்ளி கிராமத்திற்கு அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜாகியாபேட்டைக்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் மீது பயணம் செய்த கூலித் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4வது விபத்து-ஒருவர் பலி:
விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் முன்னாள் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications