கட்டாய கிராம சேவை: அன்புமணியைக் கண்டித்துbr/பயிற்சி டாக்டர்கள் போராட்டம்!
மதுரை: கிராமப்புறங்களில் கட்டாயம் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஒரு ஆண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும். தாலுகா மருத்துவமனைகளில் 4 மாதம், வட்ட மருத்துவமனைகளில் 4 மாதம், பேரூராட்சி மருத்துவமனைகளில் 4 மாதம் என 1 வருடம் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கு டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பு இன்று பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்பு பேட்ஜ் அணிந்தபடி நடந்த இந்தப் போராட்டம் மதுரை, சென்னை, தஞ்சை என அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவ, மாணவியர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தனது முடிவை அரசு வாபஸ் பெறாவிட்டால் நாளை மறு நாள் முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
செப். 5ல் மாநிலம் முழுவதும் போராட்டம்:
இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் உத்தரவை எதிர்த்து தமிழகம் முழுவதும் வருகிற 5ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என மருத்துவ மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் மருத்துவ சேவையை எந்த கிராமத்தில் போய் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களை நிரந்தர மருத்துவர்களாக அரசு நியமனம் செய்ய வேண்டும். அமைச்சர் சொல்வது போல் கிராமத்தில் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டும் என்பது இதற்கு முன்பெல்லாம் கிடையாது.
மருத்துவ படிப்பு படிக்க வரும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் இருந்து தான் வருகிறார்கள். அதனால் எங்களுக்கு கிராம மக்களின் நிலைமை தெரியும். கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை அரசு நிரப்ப முன் வர வேண்டும்.
எனவே, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பிறப்பித்துள்ள உத்ரவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5ம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிப்பார்கள்.
சென்னையில் மெமோரியல் ஹால் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications
