இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கக் கோரி பாஜக தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்றும் போராட்டத்தில் குதித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கின.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரி கட்சிகள் அடங்கி குழுவை அமைத்தது தவறு. கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இதனால் கடந்த 2 நாட்களாக இரு அவைகளிலும் எந்த நடவடிக்கையும் நடக்கவில்லை. இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் முடங்கின.
இன்று காலை லோக்சபா தொடங்கியதும், பாஜக பிரச்சினையைக் கிளப்பியது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர் மல்ஹோத்ரா கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி கோஷமிட்டனர்.
இதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பிக்களும் போராட்டத்தில் குதித்ததால் அவையில் கூச்சல், குழப்பமாக இருந்தது.
இதையடுத்து அவையை 12 மணி வரை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒத்திவைத்தார். பிறகு 12 மணிக்கு அவை கூடியபோதும் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரைக்கும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல ராஜ்யசபா நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டதால் அதுவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications