தேமுதிகவில் 'முரட்டு பக்தர்' பெரியசாமி மகன்!
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், முதல்வர் கருணாநிதியின் முரட்டு பக்தன் என்று திமுகவினரால் அறியப்படுபவருமான பெரியசாமியின் மகன் ராஜா, தேமுதிகவில் இணைந்துள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது.
சேலத்திற்கு எப்படி வீரபாண்டி ஆறுமுகமோ அதுபோல தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பெரியசாமி. அம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத இரும்பு மனிதர். நீண்ட காலமாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பெரியசாமி இருந்து வருகிறார். அவரை மீறி தூத்துக்குடி மாவட்ட திமுகவில் யாரும் செயல்பட முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். இவரது மகள் கீதா ஜீவன் அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் பெரியசாமியின் மகன் ராஜா திடீரென தேமுதிகவில் இணைந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ராஜா, அவருக்கு பொன்னாடை போர்த்தி கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ராஜா தேமுதிகவுக்கு போயுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராஜா இதுவரை திமுகவில் இருந்ததில்லை. அவருக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, எனவே அவர் தேமுதிகவில் இணைந்ததால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்று ராஜாவின் தந்தையான பெரியசாமி விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ராஜாவுக்கு சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கிடையாது கட்சி பொறுப்பிலும் அவர் இருந்ததில்லை.
தனியாக தொழில் செய்து வருகிறார். இடையில் பாஜகவில் இருந்தார். இப்போது தேமுதிகவில் இணைந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் தேமுதிகவில் இணைந்ததால் திமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.
எனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் யாரோ விரித்த சதி வலையில் ராஜா சிக்கியுள்ளார். அவருக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில்தான் கல்யாணம் நடந்தது. இருந்தாலும் அவர் திமுகவிலிருந்து விலகியேதான் இருந்தார். இந்த நிலையில் அவர் வேறு கட்சியில் சேர்ந்துள்ளதால் திமுகவுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது என்று கூறியுள்ளார் பெரியசாமி.
பெரியசாமி இப்படிக் கூறியிருந்தாலும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜாவை வைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சிப் பணிகளை முழு வீச்சில் விஜயகாந்த் முடுக்கி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications