நவாஸ் ஷெரீப் மீண்டும் சவூதிக்கு 'பேக்கப்'!
இஸ்லாமாபாத்:
7 ஆண்டுகள் கழித்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த 1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த முஷாரப் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அடுத்த ஆண்டே நவாஸ் ஷெரீப், நாடு கடத்தப்பட்டார்.
சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர் பின்னர் லண்டன் சென்றார். அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் நாடு திரும்ப நவாஸுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் நாடு திரும்பப் போவதாக அறிவித்தார்.
ஆனால் நவாஸ் நாடு திரும்ப முடியாது. 10 ஆண்டுகள் அவர் சவூதியில் வசிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை மீறி அவர் வந்தால் கைது செய்யப்படுவார் அல்லது மீண்டும் நாடு கடத்தப்படுவார் என பாகிஸ்தான் அரசு எச்சரித்தது.
இருப்பினும் தனது திட்டத்தில் மாற்றம் இல்லை, 10ம் தேதி நான் பாகிஸ்தான் திரும்புகிறேன், கைது செய்தால் செய்து கொள்ளட்டும் என்று நவாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் பாகிஸ்தான் சர்வதேச விமானம் மூலம் பாகிஸ்தான் கிளம்பினார். நவாஸ் வருகையையொட்டி பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்களில் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
இஸ்லாமாபாத் விமான நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. விமான நிலையத்தை சுற்றிலும் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு யாரும் நடமாட அனுமதி மறுக்கப்பட்டது. விமான நிலையமும் முழுமையாக காலி செய்யப்பட்டது. கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டனர்.
விமான நிலையப் பகுதியில் செல்போன்கள் செயல்படாமல் செயலிழக்க செய்யப்பட்டன. பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இஸ்லாமாபாத் மற்றும் ராவில்பிண்டி ஆகிய நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் நவாஸ் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். நவாஸை வரவேற்பதற்காக விமான நிலையம் நோக்கிக் கிளம்பிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அசன் இக்பால் கைது செய்யப்பட்டார்.
திரும்பினார் ஷெரீப்:
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு நவாஸ் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால் விமானத்திலிருந்து யாரும் இறங்க அனுமதிக்கப்படவில்லை. விமானத்தின் கதவுகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
விமானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நவாஸ் ஷெரீப் தொடர்ந்து விமானத்துக்குள்ளேயே இருந்தார்.
பாஸ்போர்ட்டைத் தர மறுப்பு:
விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், கமாண்டோ படை வீரர்களும் விமானத்திற்குள் சென்றனர். அங்கு நவாஸ் ஷெரீப்பை சந்தித்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டைத் தருமாறு கேட்டனர்.
ஆனால் பாஸ்போர்ட்டைத் தர முடியாது என்று ஷெரீப் மறுத்து விட்டார். தொடர்ந்து அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஷெரீப்பை சுற்றிலும் கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டனர்.
ஷெரீப்பை கீழே இறங்க அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த, அவருடன் வந்த ஷெரீப்பின் ஆதரவாளர்கள் முஷாரப் அரசை எதிர்த்து கோஷமிட்டபடி இருந்தனர்.
இந்த நிலையில் முதலில் விமானத்தில் இருந்த பிற பயணிகள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஷெரீப் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஷெரீப் விமானத்தை விட்டு வெளியேறினார்.
கமாண்டோ படையினர் புடை சூழ விமான நிலைய முக்கியப் பிரமுகர்கள் தங்கும் பகுதிக்கு ஷெரீப் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை 3 சவூதி மற்றும் 7 பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் சந்தித்தனர்.
கைதானார்:
ஷெரீப்பை மீண்டும் சவூதிக்கே (ஜெட்டாவுக்கு) அனுப்பி வைக்கவுள்ளாக ஷெரீப்பிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை நவாஸ் ஷெரீப் ஏற்கவில்லை. என்னை நாடு கடத்துவதற்குப் பதில் பேசாமல் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிய நிலையில் ஷெரீப்பை கைது செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஷெரீப் கைது செய்யப்பட்டார். அவரை பஞ்சாப் மாநில போலீஸார் கைது செய்தனர்.
நாடு கடத்தப்பட்டார்:
இருப்பினும் அவரை சிறைக்குக் கொண்டு செல்லாமல் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் வைத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து தயாராக வைக்கப்பட்டிருந்த விமானத்தில் ஏற்றி ஷெரீப்பை ஜெட்டாவுக்கு அனுப்பி வைத்தனர்.
முஷாரப் அரசின் இந்த செயலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வாதிகாரி முஷாரப் பதவியிலிருந்து அகற்றப்படும் வரை ஓயப் போவதில்லை என்று அவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
சபாஷ் வரவில்லை:
முன்னதாக இன்று பாகிஸ்தான் வந்த நவாஸுடன் அவரது தம்பி சபாஷ் ஷெரீப் வரவில்லை. அவர் லண்டனிலேயே தங்கியுள்ளார். ஒரு கொலை வழக்கில் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அவர் வரவில்லை என்று தெரிகிறது.
மீண்டும் ஷெரீப்பை நாடு கடத்துவதற்கு வசதியாக விமான நிலையத்தில் 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நவாஸ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறுகையில், நவாஸ் விவகாரம் குறித்து இன்னும் சில மணி நேரங்களில் அரசின் நிலை தெரிய வரும்.
நவாஸை நாடு கடத்தவோ, கைது செய்யவோ தேவையில்லை என்பது எனது கருத்து. என்னிடம் முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டால் அவரை விடுவிக்கவே தீர்மானிப்பேன்.
இருப்பினும் இதுகுறித்து அரசுதான் இறுதி முடிவெடுக்க முடியும். சில மணி நேரங்களில் தெளிவு நிலை உருவாகும் என்று கூறியிருந்தார்.
நவாஸ் வருகையால் ஏற்பட்டுள்ள பதட்டத்தையடுத்து லாகூர், கராச்சி, பெஷாவர் ஆகிய விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கராச்சி நகரிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 7 ஆண்டு நாடு கடத்தல் வாழ்க்கைக்குப் பின்னர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications