கோடநாடு கட்டங்களை இடிக்க நோட்டீஸ்- ஜெ தங்கியுள்ள நிலையில் ஆர்டிஓ விசாரணை
கோத்தகிரி:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரமாண்டமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் தங்கியுள்ள நிலையில், அந்த எஸ்டேட் கட்டப்பட்டதில் நடந்துள்ள அப்பட்டமான விதிமீறல்கள் குறித்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க கடந்த 10ம் தேதி கோடநாடு ஊராட்சித் தலைவர் பொன் தாஸ் எஸ்டேட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் இடிப்பு வேலைகளை ஊராட்சியே தொடங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந் நிலையில் கடந்த 16ம் தேதி ஜெயலலிதா திடீரென கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தார். 10 நாட்கள் அவர் இங்கு தங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் திடீர் வருகையால் எஸ்டேட்டின் விதிமீறல்கள் குறித்து கோடநாடு ஊராட்சி நடவடிக்கை எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொன்தாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், விதி மீறிய கட்டடத்தை இடிக்க 10ம் தேதி கோடநாடு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதா இங்கு தங்கியுள்ளார்.
இதனால் கோடநாடு ஊராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார். நடவடிக்கையில் இருந்து எஸ்டேட்டைக் காக்கவே ஜெயலலிதா அங்கு போய் உட்கார்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் குன்னுார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று கோடநாடு எஸ்டேட்-அண்ணாநகர் சாலை குறித்த முக்கிய விசாரணை நடைபெறுகிறது. இதில் கோடநாடு ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications
