மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு எல்காட் மூலம் அரசு நிலம்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஹனிவெல், எச்.சி.எல். எஸ்.ஜி.டி. இந்தியா, சூதர்லேண்ட், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், காக்னிசெண்ட் டெக்னாலஜிஸ், செனித் சாப்ட்வேர் உள்ளிட்ட சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு எல்காட் மூலமாக நிலம் ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

அமைச்சரவைக் குழு விரிவாக ஆய்வு செய்த புதிய தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (ITES) வழங்கிட ஹனிவெல் இன்டர்நேஷனல் இந்தியா சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எஸ்.ஜி.டி. இந்தியா, சூதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், காக்னிசெண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், செனித் சாப்ட்வேர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எல்காட் மூலமாக நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சிபி லிமிடெட், சூதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ், காக்னிசெண்ட் டெக்னாலஜிஸ், ஸ்கோப் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு நிலம் ஒதுக்கிடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ரூ. 787.42 கோடியாகும். இந்தத் தொகை நகராட்சி மன்றங்களுக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளதாலும், வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இடையூறாக இருப்பதாலும் அந்த கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள அனுமதியற்ற காலிமனைப் பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டத்தை சென்ற ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளதால், இத்திட்டத்தை இந்த வருடம் டிசபம்பர் 31 வரை நீட்டிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற