"உடலுறவு" மூலம் பரவும் ஹண்டா வைரஸ்.. பேரழிவை ஏற்படுத்த வரும் புதிய வகை பாதிப்பு! எச்சரிக்கை
பெர்ன்: உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், தற்போது 'ஹண்டா வைரஸ்' எனப்படும் மற்றொரு அபாயகரமான வைரஸ் குறித்த புதிய கண்டுபிடிப்பு உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஹண்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒரு ஆணின் விந்தணுவில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகும் வைரஸ் எச்சம் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் உடலுறவு மூலமும் பரவக்கூடும் என்ற புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது 'எம்வி ஹோண்டியஸ்' (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் ஹண்டா வைரஸ் பரவியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று காரணமாக ஏற்கனவே 11 பேர் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த விவகாரத்தைத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஸ்பீஸ் ஆய்வகம் நடத்திய ஆய்வு, மருத்துவ உலகையே உற்றுநோக்க வைத்துள்ளது.

ஹண்டா வைரஸ்
அதாவது கடந்த 2016ம் ஆண்டு தென் அமெரிக்காவிற்குச் சுற்றுலாச் சென்ற 55 வயது சுவிஸ் நபர் ஒருவருக்கு 'ஆண்டீஸ்' ரக ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அப்போது அவரது ரத்தம், சிறுநீர் மற்றும் சுவாசப் பாதையிலிருந்து வைரஸ் முற்றிலும் மறைந்துவிட்டது. இதனால் அவரும் வழக்கமான பணிகளுக்குத் திரும்பிவிட்டார்.
விந்தணுவில் வைரஸ்
ஆனால், அவரது உடலில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தொற்று ஏற்பட்டு 71 மாதங்களுக்குப் பிறகு (அதாவது கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) எடுக்கப்பட்ட விந்து மாதிரிகளில் இன்னமும் ஹண்டா வைரஸின் ஆர்என்ஏ மரபணுக்கள் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலுறவு மூலம் பரவுமா?
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "எங்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஹண்டா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
மனித உடலில் 'இம்யூன் பிரிவிலேஜ்ட் சைட்' (Immune privileged site) எனப்படும் சில குறிப்பிட்ட பகுதிகள் உள்ளன. விந்துப்பை மற்றும் கண்கள் இதில் அடங்கும். விந்துப்பை, கண்கள் போன்ற உடலின் சில பகுதிகளில் நமது நோய் எதிர்ப்புச் சக்தி எளிதாக நுழைந்து கிருமிகளை அழிக்க முடியாது. அதாவது இந்தப் பகுதிகளில் வைரஸ், பாக்டீரியாக்கள் இருந்தாலும் அதை நமது உடலால் அழிக்க முடியாது. இதன் காரணமாகவே எபோலா மற்றும் ஜிகா போன்ற கொடூரமான வைரஸ்களை நமது நோய் எதிர்ப்புச் சக்திகள் அழித்த பிறகும் இந்த பகுதிகளுக்குள் அவை பல ஆண்டுகள் ஒளிந்து உயிர்வாழும். தற்போது ஹண்டா வைரஸும் இதே பாணியைப் பின்பற்றுவது உறுதியாகியுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
அதேநேரம் விந்தணுவில் வைரஸின் மரபணு இருப்பதால் மட்டுமே அந்த நபர் மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்புவார் என்று அர்த்தமல்ல எனப் கனடா பொதுச் சுகாதார முகமையின் சிறப்பு நோய்க்கிருமிப் பிரிவுத் தலைவர் டேவிட் சஃப்ரோனெட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் அந்த வைரஸை முழுமையாகக் கொன்ற பிறகும், அதன் இறந்த உடலின் மரபணு பாகங்கள் அங்கே தங்கியிருக்கலாம். அதைத் தான் நாம் ஆர்என்ஏ சோதனையில் பார்க்கிறோம்" என்றார்.
நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு நிபுணர் ஸ்டீவன் பிராட்ஃபுட் இது தொடர்பாகக் கூறுகையில், "என்ன தான் ஆர்என்ஏ இருந்தாலும் கூட மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு நோயாளி, அதன் பிறகு மற்றவர்களுக்கு வைரஸை பரவியதாக ஒரு சம்பவம் கூட இதுவரை உலகில் ஒரு வழக்கு கூடப் பதிவாகவில்லை" என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஏன் முக்கியம்
தற்போது 'எம்வி ஹோண்டியஸ்' சொகுசுக் கப்பலில் இந்த ஹண்டா வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி மரியா வான் கெர்கோவ் தலைமையிலான குழுவினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொடர்ந்து மாதிரிகளை எடுத்து, அவர்களைத் தாக்கிய வைரஸ் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பரவிய சமயத்திலும் கூட தொடக்கத்தில் உலக நாடுகள் காட்டிய அலட்சியமே அது உலகெங்கும் பரவ முக்கிய காரணமாக இருந்தது. ஹண்டா வைரஸில் அந்தத் தவறு நடக்கக்கூடாது என்பதாலேயே தொடக்கத்திலேயே ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. பொதுவாக எலிகள் மற்றும் அவற்றின் எச்சங்கள் மூலமே பரவும் இந்த வைரஸ், எச்சில் துளிகள் மூலமும், இப்போது உடலுறவு மூலமும் பரவக்கூடும் என்ற செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியம் வேண்டாம்!
'ஆர்என்ஏ இருந்தால் மட்டும் பரவாது' என்று ஆய்வாளர்கள் சொன்னாலும் கூட வைரஸ் என்பது தன்னை தானே தொடர்ச்சியாக உருமாற்றிக் கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் எது வேண்டும் என்றாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் உலக நாடுகள் உடனடியாக இதற்கான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு பெருந்தொற்று வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications