ஸ்டான்லி காய்ச்சல்: உ.பி. மாணவி மரணம்
சென்னை:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பரவிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உ.பி. மாணவி கரீமா பிரதான் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் மாணவ, மாணவியர்களிடையே பெரும் பீதியும், சோகமும் நிலவுகிறது.
சென்னை அரசினர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கடந்த 25ம் தேதி விடுதியில் தங்கியிருக்கும் மாணவ-மாணவிகள் 20 பேருக்கு மேல் திடீரென வாந்தி-பேதி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்குள்ளேயே மயக்கமடைந்து விழுந்தனர். பின்னர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
இருப்பினும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் மூளை காய்ச்சலால பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. வடமாநிலத்தை சேர்ந்த பானர்ஜி, துர்கேஷ் பிரகாஷ், கரீமா பிரதான் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்கள் மூன்று பேரும் அவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
3 பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் மற்ற மூவரும் அபாய கட்டத்தைத் தாண்டியதாக கூறப்பட்டது. ஆனால் கரீமாவின் நிலைமை மிகவும் மோசமடைந்து அவரது மூளை செயலிழந்தது, கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கரீமா மரணமடைந்தார். அவருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருந்தார். இருப்பினும் கரீமாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.
அவரது உடலை பார்த்து பெற்றோர், அவரது சகோதரர், உறவினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.
மாணவி கரீமாவின் உடலுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்த கரீமாவின் உடல் மயிலாப்பூர் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்து பின்பு தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை மகளின் அஸ்தியை வாங்கிக் கொண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை விமானம் மூலம் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.
கரீமாவின் இறப்பு குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், நாங்கள் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. இந்த மரணம் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவும் விரும்பவில்லை.
நாங்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்து திரும்பி செல்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.
கரீமாவின் தந்தை உ.பியில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தாய் விஜயலட்சுமி கல்லூரி பேராசிரியை, கரீமாவின் அண்ணன் இந்திய கடற்படையில் என்ஜீனியராக வேலை பார்க்கிறார்.
கரீமாவின் மரணத்தால் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் பீதியும், கவலையும் அடைந்துள்ளனர். தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications