திமுக-அதிமுக பஸ் தொழிலாளர்கள் மோதல்
திருநெல்வேலி:
செங்கோட்டையில் பஸ்களை இயக்குவது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சேது சமுத்திர திட்டத்தினை அமுல்படுத்த கோரி திமுக கூட்டணியினர் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இப்போராட்டம் நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள், திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேருந்துகள் சுத்தமாக ஓடவில்லை.
இதேபோல தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. இந் நிலையில், தென்காசி அரசு போக்குவரத்து கழகத்திற்கு வந்த திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மணிராஜ் உள்ளிட்ட சிலர், அலுவலகத்தைப் பூட்டி, வருகைப் பதிவேட்டையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி டிப்போவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சில பகுதிகளுக்கு பேரூந்து இயக்கம் நடைபெற்றது. செங்கோட்டை விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து திருப்பதி, எர்ணாகுளம், பெங்களுருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கேரள மாநில அரசு பேருந்துகள் எதுவும் தென் மாவட்டத்திற்குள் இயக்கப்படவில்லை.
பேருந்து போக்குவரத்து இல்லாவிட்டாலும் வேன், மினி பஸ், ஆட்டோக்கள் இயக்கம் இருந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடையவில்லை.
திருநெல்வேலியில் மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் ஏராளமான திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
செங்கோட்டையில் இயங்கி வரும் விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்தை இயக்குவது தொடர்பாக அதிமுக தொழிற்சங்கத்தினருக்கும், திமுக தொழிற்சங்கத்தினருக்கும் மோதல் உருவானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படம் எடுக்க சென்ற பத்திரிக்கையாளரை 'போதையில்' இருந்த தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் சமரசத்தை ஏற்படுத்தி மோதலைத் தவிர்த்தனர்.












Click it and Unblock the Notifications