பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து- குமாரசாமி திடீர் குற்றச்சாட்டு
பெங்களூர்:
தான் தந்த உறுதிமொழிகளை பாஜக மட்டும் நிறைவேற்றியிருக்கிறதா என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பாபர் மசூதியை உடைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்த பாஜக அரசு, அது இடிபடவும் காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியில் தொடர முடிவு செய்துள்ள குமாரசாமி அதிகாரத்தை பாஜகவிடம் தர மறுத்து வருகிறார்.
இந் நிலையில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கடிதங்களை குமாரசாமியிடம் கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாக்கள் குறித்து இதுவரை முடிவேதும் எடுக்காத குமாரசாமி நாளை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதில் பாஜக அமைச்சர்கள் பங்கேற்றக வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
கூட்டத்தில் அவர்கள் பங்கேற்காவிட்டால் அதைக் சுட்டிக் காட்டியே பாஜகவிடம் அதிகாரத்தை வழங்க முடியாது என குமாரசாமி அறிவிக்கக் கூடும். இந் நிலையில் இன்று மதசார்பற்ற ஜனதா தளத்தின் செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அதில் பேசிய குமாரசாமி பாஜகவை மிகக் கடுமையாகத் தாக்கினார்.
அவர் பேசுகையில்,
கொடுத்த உறுதிமொழியை நான் காப்பாற்றவில்லை என பாஜக சொல்கிறது. அவர்கள் மட்டும் உறுதிமொழியை காப்பாற்றினார்களா. பாபர் மசூதியை இடிக்க விடமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தது யார். பாஜக தான். அதே பாஜக தான் மசூதியையும் இடித்துத் தள்ளியது. இதனால் உறுதிமொழி பற்றியெல்லாம் பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
நான் மக்களிடம் செல்ல, தேர்தலை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். பாஜகவிடம் அதிகாரத்தைத் தர ேவண்டும் என்றால் அவர்கள் தங்களது மதவாதம் குறித்து சில விஷயங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
சமீபத்தில் ராமர் பிரச்சனையை முன் வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது பாஜகவும் அதைச் சார்ந்த அமைப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக பஸ்ஸை எரித்து இரு அப்பாவிகளை எரித்துக் கொன்றுள்ளனர்.
மங்களூரில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளனர். இந்த விவகாரங்களில் கைதான அனைவருமே பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். இந் நிலையில் இவர்களிடம் ஆட்சியைத் தந்தால் சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.
அதே போல என் மீது ரூ. 150 கோடி லஞ்ச ஊழல் குற்றம் சாட்டிய பாஜக எம்எல்சியும் பாஜக அமைச்சரும், என் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர். ஆனால், அதை பாஜக தலைவர்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது ஏன்.
ஒட்டுமொத்தமாக அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டால் எனக்கு நெருக்கடி ஏற்படும் என பாஜக நினைக்கிறது. இதன் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது. ஆனால், இதெற்கெல்லாம் நான் பணிந்துவிட மாட்டேன். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இப்போது இருப்பது பாஜக தான்.
அதிகார மாற்றம் என்றால் அதை முறைப்படி செய்ய வேண்டும். திடீரென நான் ராஜினாமா செய்துவிட்டு எதியூரப்பாவை முதல்வராக்குங்கள் என்று சொன்னால்.. அது எப்படி சாத்தியமாகும். இதுவரை ஆட்சி மாற்றம் குறித்து ஒரு பாஜக தலைவர் கூட என்னுடன் பேசவில்லை.
இப்போதுள்ள நிலையில் எதுவும் சாத்தியம் தான். இதே கூட்டணி ெதாடரலாம் அல்லது காங்கிரஸ் ஆதரவை நாங்கள் பெறலாம். பேச்சுவார்த்தைக்கான கதவை அடைத்தது பாஜக தான். நான் அல்ல.
முதலில் இந்த கூட்டணி ஆட்சி எப்படி அமைந்தது என்பதை பாஜக நினைத்துப் பார்க்க வேண்டும். எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியில் அமர பாஜக நினைத்தது. ஆனால், உடைக்க முடியாமல் போனதால் என்னை முதல்வராக்க முன் வந்தது.
முதல் 20 மாதங்கள் நான் முதல்வர் பின்னர் பாஜக முதல்வர் என்று லோக்கல் அட்ஜஸ்மெண்ட் தான் ஏற்பட்டது. அது ஒன்றும் பெரிய உடன்பாடு கிடையாது என்றார் குமாரசாமி.
இந் நிலையில் டெல்லியில் நாளை நடக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவை ஏற்பது என இன்று பெங்களூரில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாஜக முக்கிய கூட்டம்:
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாஜகவின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது.
இதில் அத்வானி, ராஜ்நாத் சிங், யஷ்வந்த் சின்ஹா, வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் பாஜக சார்பில் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள எதியூரப்பாவும் பங்கேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications