மனம் போன போக்கில் பேசுவதா? இளங்கோவனுக்கு சிபிஎம் கண்டனம்!
சென்னை:
கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிப்பதை மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியின்போது அமைச்சர் இளங்கோவன், மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவதை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சத்தியமூர்த்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்களில் அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹூப்பரும் ஒருவராவார். அந்த விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் இளங்கோவன், விழாவிற்கு வந்திருந்தோரை திருப்தி படுத்துவதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை மட்டம் தட்டும் வகையிலும், கேலி செய்யும் வகையிலும் பேசியுள்ளார்.
ரஷ்யாவோ அல்லது அதன் தலைநகரமான மாஸ்கோவோ இன்று கம்யூனிஸ்ட் ஆட்சியில் இல்லை என்பதைக் கூட உணராமல் தனது அறியாமையை வெளிப்படுத்தி பேசியிருக்கிறார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு அரசு ஆட்சி நடத்த வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பவர்கள் இடது சாரிகள். மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள குறைந்த பட்ச செயல் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் ஆதரவு. மாறாக, இளங்கோவனை அமைச்சராக்கி அழகு பார்ப்பதற்கு அல்ல.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறைந்த பட்ச செயல் திட்டத்துக்கு மாறானது. அதில் பாதகமான பல அம்சங்கள் உள்ளன. இதுபற்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்கு அணி குழுவில் இடதுசாரிகளுடன் அரசு விவாதித்துக் கொண்டிருக்கிறது.
இது தவிர நாடாளுமன்றத்திலும் முழு விவாதம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்தப் பிரச்சனையை மிரட்டலாக அமைச்சர் இளங்கோவன் பார்த்தால் அது அவருடைய விருப்பம்.
நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒரு பிரச்சனையில், குறைந்த பட்சம் 40 வருடங்களுக்கு நாட்டைக் கட்டுப்படுத்த போடப்படும் முயற்சியைத்தான் இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே, பிரச்சனையின் மீது ஆரோக்கியமான விவாதத்தை நடத்தாமல் மனம்போன போக்கில் பேசுவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல என்று டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications