அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் போதிய அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாததால் அங்கு வளர்ச்சிப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அலுவலகமே ஆள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற ஊர் செங்கோட்டை. இவ்வூர் கேரள மாநிலத்தோடு இருந்த காலகட்டத்திலேயே நகராட்சி அந்தஸ்தினை பெற்ற பகுதி ஆகும். தனி சட்டசபைத் தொகுதியாகவும் இருந்தது.
ஆனால் கேரளாவிலிருந்து தமிழகத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் ஏராளமான அரசு அலுவலகங்களையும், தொகுதி அந்தஸ்தினையும் இழந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வளர்ச்சியின்றி பின்னோக்கி செல்லும் நகராக மாறியுள்ளது.
தற்போது செங்கோட்டை நகராட்சியில் 45 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு நலப் பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியில் செயல்படுத்திட அரசு நிதி ஓதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் இப்பணிகளை தொடரவோ, செயல்படுத்தவோ, நகராட்சி ஆணையர், மேலாளர், கணக்காளர், உதவியாளர்கள், கிளார்க் என 20க்கும் மேற்பட்ட பணியிடங்களில் பணியாற்றியவர்கள் பணி மாறுதலில் சென்று விட்டதால் சுமார் 4 நிர்வாக பணியாளர்களை தவிர வேறு பணியாளர்கள் இல்லாமல் நகராட்சியே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.
குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, மின்வசதி உள்ளிட்டவை மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்றுவிட்டது. ஆகவே காலி பணியிடங்களை அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிரப்பிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கணேசன், தேமுதிக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications