பாஜகவிற்காக அறிக்கை விடும் ஜெ- கருணாநிதி தாக்கு

Subscribe to Oneindia Tamil


சென்னை:

ராமர் பாலம் என்ற பெயரை பயன்படுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை சீரழிக்க நினைப்பது நியாயமா? என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேது சமுத்திரத் திட்டத்திற்காகக் குரல் கொடுத்தது யார். நீயா? நானா?, அவரா? இவரா?, அந்தக் கட்சியா? இந்தக் கட்சியா? என்று கேள்விகளை எழுப்புவதைவிட தமிழகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எல்லோரும் வலியுறுத்தினோம் என்பதில்தான் அத்திட்டத்தின் முன்னேற்றமே இருக்கின்றது.

இந்தத் திட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, ஒரு நீண்ட கால முயற்சிக்கான வரலாறு உண்டென்பதை நேற்றைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆன்றோர்கள், சான்றோர்கள், அரசியல் தலைவர்கள், பலர் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில் தங்கள் ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்கள்.

குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபையில் நான் 1958ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பேசும்போது, எனக்கு முன்பு பேசிய உறுப்பினர் தூத்துக்குடி துறைமுகத்தைப் பற்றி பேசினார். அது கொழும்புத் துறைமுகத்துடனும், மும்பை துறைமுகத்துடனும் போட்டி போடக்கூடிய ஆழ்கடல் துறைமுகமாக மாற 100 மைல் அளவுக்கு ஒரு கால்வாய் அமைக்க வேண்டும்.

இலங்கையில் மேற்குக் கடற்கரைக்கும், இங்குள்ள தென்கோடி கீழ்க் கடற்கரைக்கும் இடையே உள்ள பாறைகளை அகற்றினால் இன்னும் பல நல்ல துறைமுகங்களை அமைக்கலாம். ராமசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு இந்த சேது சமுத்திர திட்டத்தைப் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்து, அது மத்திய சர்க்காருக்கும் அனுப்பப்பட்டு இன்னும் கவனிக்கப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அதை நிறைவேற்றக்கூடாது என்று கேட்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அதன்பிறகு, 1960ம் ஆண்டு சட்டமன்றத்தில் அண்ணா உரை நிகழ்த்தியபோது, நாம் திட்டவட்டமாக மத்திய அரசிடம் கேட்க வேண்டியது சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை நிறைவேற்றப் போகிறீர்களா இல்லையா என்றுதான்.

தலைசிறந்த அறிவாளி ராமசாமி முதலியார் ஆராய்ச்சி செய்து கொடுத்த அறிக்கையை வைத்துக் கொண்டு அதில் ஏற்படுகின்ற பத்து கோடியா, பதினைந்து கோடியா என்கிற சில்லறை தகராறை வைத்துக் கொண்டு, மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்க முடியுமா என்னவோ தெரியவில்லை. இந்தத் திட்டங்களை நிறைவேற்றப் போகிறீர்களா அல்லது நாங்கள் இதைவிட்டு விலகவா என்று மத்திய அரசை இந்த அரசு துணிந்து கேட்க வேண்டும் என்றார்.

இதன்பிறகு 1961ம் ஆண்டு திருப்பரங்குன்றம் திமுக மாநாட்டிலும், அதைத் தொடர்ந்து பல மாநாடுகளிலும், சேது சமுத்திரத் திட்டம் முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக அமைந்தது.

1963ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி காமராஜர் முதல்வராக இருந்தபோது, நேரு அமைச்சரவைக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டத்தை 4வது ஐந்தாண்டு திட்டத்தின் முன் நடவடிக்கை பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுக வேலைகள் சுணக்கமுற்று, மீன்பிடி துறைமுகமாக மாற்ற முயற்சி நடந்தபோது, 1967ல் சென்னை வந்த மத்திய கப்பல்துறை அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் தங்கியிருந்த இடத்திற்கே அண்ணா சென்று சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், முன்னாள் தொழில்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனையும் அழைத்துச் சென்று துறைமுகம் நஷ்டத்தில் இயங்கும் நிலை வந்தால், அந்த நஷ்டத்தை மாநில அரசே ஏற்கும் என்ற உறுதியையும் தந்து தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம் வருவதற்கு பாடுபட்டார்.

1972ல் தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில், வ.உ.சி. சிலையை இந்திராகாந்தி என் தலைமையில் திறந்து வைத்தபோதும் தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர சேதுக்கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று பேசினேன்.

1971ம் ஆண்டு சேது சமுத்திர திட்ட மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டு 52 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு 72 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

1980ம் ஆண்டு பொருளாதார ரீதியாக சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால், தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் ஜேம்ஸ் ஐசக் கோயில் பிள்ளை என்பவர் சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாகவும், பயனுள்ளதாக அமையும் ரீதியில் ரூ.110கோடி மதிப்பீட்டில் ஒரு அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார்.

1986ம் ஆண்டும் மே மாதம் 10ம் தேதி அன்று எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1998, செப்.15ல் வைகோ நடத்திய நிகழ்ச்சியில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு, சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் மத்திய அரசு நிறைவேற்றும் என்று அறிவித்தார்.

நான் கூறியுள்ள இந்த கால கட்டங்களில் ஆடம்ஸ் பாலம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ராமர் பாலம் என்று எந்தவொரு குறிப்பும் கிடையாது. ஆடம்ஸ் பாலத்தை அகற்றிவிட்டு, சேது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, பிரச்சனை ஏதும் எழுப்பப்படவில்லை.

அப்படி எழுப்பப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்கு அதிமுக 2001ல் தேர்தல் அறிக்கையைப் படித்து புரிந்து கொள்ளலாம். அதில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு,

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். ராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் கால்வாய் நோக்கம்.

அதாவது 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியி மணல் மேடுகள், பாறைகளை அகற்றிவிட்டு கால்வாய் அமைப்பதுதான் நோக்கம் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு, இப்போது அந்தப்பாதை வழியாக திட்டம் கூடாது என்கிறார். கடந்த 1ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறுகிறார். அது பாஜகவிற்காக சொல்லப்படும் வார்த்தைகள் என்றுதானே அர்த்தம்.

இவ்வளவு விவரங்களையும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலே எழுதிவிட்டு, தற்போது அதனால் யாருக்கும் பலனில்லை என்று அறிக்கை விடுகிறார் என்றால் மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருக்கும்போது சேது சமுத்திரத் திட்டம் வரக்கூடாது என்ற ஒரே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலா போய்விடுவார்கள்.

இந்த திட்டத்தினை இப்போது கேள்விக்குறியாக ஆக்கியிருப்பது ராமர் பாலம் பிரச்சனைதான். கடந்த காலங்களில் இதுபற்றி எந்த குறிப்பும் வெளிவந்ததில்லை என்பதையும், அப்படி ஒன்று இருந்தாலும் அதை அகற்ற வேண்டும் என்பதில் அதிமுக அழுத்தந்திருத்தமாக கருத்து கொண்டிருந்தது என்பதையும் அவர்களின் தேர்தல் அறிக்கையே எடுத்து காட்டுகிறது.

நாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை எப்படி பிறர் மீது திணித்திட்ட முனைவதில்லையோ அது போலவே பிறர் பின்பற்றுகின்ற பழக்கவழக்கங்களை, கொள்கைக் கோட்பாடுகளை, அவை அறியாமையின் பாற்பட்டதாக இருந்தால் அவற்றை அவர்கள் நம் மீது திணிப்பதற்கும் நாம் உடன்படுவதில்லை.

ஆட்சியில் இருப்போர் கடமைகளையும், பொறுப்புகளையும், உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து செயல்படுவதுதான் நமது பண்பாடு ஆகும். 25 ஆண்டு காலமாக ஓடாமல் கிடந்த திருவாரூர் ஆழித் தேரை ஓட்டியது திமுக ஆட்சியில் தான். நான் முதல்வராக இருந்த போதுதான்.

எந்தவொரு ஆலயத்திலும் அவற்றின் பரம்பரை திருவிழாக்களுக்கோ, தீர்த்தமாடுதல் போன்ற வைபவங்களுக்கோ இந்த ஆட்சியில் தடையில்லை. அண்மையில்தான் விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் தடபுடலாக நடந்திருக்கிறது என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது. 2006ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1,493 கோவில்களுக்கு திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு நடந்துள்ளது.

மேலும் 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி மலை முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்பட 253 கோவில்களில் திருப்பணியும், மேம்பாட்டு பணிகளும் செய்ய ஆணை பிறப்பித்து பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. மேலும் 20 கோவில்களுக்கு தங்கத்தேர் செய்ய முடிவு செய்து அவற்றில் 7 தேர்கள் முடிவுற்று, 13 தேர்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கிருஷ்ணா நதி, சண்முகா நதி, பிரம்மபுத்ரா நதி போன்றவைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றனவே, இந்த நதிகள் கடவுள் பெயரால் உள்ளன என்பதற்காக அந்தத் திட்டத்தை யாராவது எதிர்க்கிறார்களா? கிடையாதே. கிருஷ்ணா நதியிலிருந்து தானே சென்னைக்கே குடிநீர் வருகிறது. அது கடவுள் பெயரில் உள்ள நதி, அது வேண்டாமென்றா சொல்லுகிறோம்.

எனவே, இப்போது பிரச்சனை என்னவென்றால், ராமர் பாலம் என்ற பெயரை சொல்லி செந்தமிழ் நாட்டுக்கு செழிப்பும், சிறப்பும் தரக்கூடிய ஒரு மாபெரும் திட்டத்தை மனம்போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்று கேட்பது தான் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+