போஸ் தண்டனையை குறைத்த கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சபாநாயகர் மீது தொப்பியை வீசிய அதிமுக எம்எல்ஏ போஸ் மீது மிகக் கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதையடுத்து அவரது தண்டனை குறைக்கப்பட்டது.

Karunanidhiசபாநாயகர் மீது தொப்பியை வீசிய அதிமுக எம்எல்ஏ போஸ் மீது மிகக் கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதையடுத்து அவரது தண்டனை குறைக்கப்பட்டது.

சபாநாயகர் ஆவுடையப்பன் மீது தொப்பியை வீசிய போஸ் விவகாரம் இன்று சட்டசபையில் கிளப்பப்பட்டது.

பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் இந்த பிரச்சனையைக் கிளப்பினார்.

அவர் பேசுகையில்,

நேற்று இந்த அவையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள். அதில் ஒருவர் அவைக் காவலரின் தொப்பியை பறித்து சபாநாயகர் மீது வீசினார். அதற்கு என்ன நடவடிக்கை என்பதை இன்று அறிவிப்பதாக தெரிவித்தீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு அந்த தீர்ப்பு அமைய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், அவையில் நேற்று நடந்த சம்பவம் அவையை கண்ணியக் குறைவாக மதிப்பிடும் வகையில் இருந்தது.

குறிப்பிட்ட பிரச்சனைகளுக்காக வெளிநடப்பு செய்வது கறுப்பு சட்டை அணிவது, வாயில் கறுப்பு துணியை கட்டி வருவது தவிர்க்க முடியாத நேரங்களில் உட்கார்ந்து தர்ணா செய்வது போன்றவற்றை அனுமதிக்கலாம்.

ஆனால் நேற்று நடந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. காவலர் தொப்பியை பறித்து சபாநாயகர் மீது வீசுவது பெருமை மிக்கவர்கள் அலங்கரித்த இந்த சபாநாயகர் பதவியை அவமதிப்பது போன்றதாகும்.

இதை நாடாளுமன்ற பயங்கரவாதம் என்று கூட குறிப்பிடலாம். சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் போஸ் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தின் நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது.

1986ல் பேராசிரியர் அன்பழகன் உள்பட 10 பேரை தகுதி நீக்கம் செய்தார்கள். அது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டுமா என்பதை இப்போது யோசிக்க வேண்டும்.

இந்த சட்டமன்ற தொடர் 2 நாட்கள் தான் நடப்பதாக இருந்தது. எங்களைப் போன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்காக மேலும் சில நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் 4 நாட்கள் நடத்த ஒப்புதல் தரப்பட்டது.

ஆனால் கிடைத்த வாய்ப்பையே கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஏற்படாமல் ஜனநாயகத்தை காக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்றார்

பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி பேசுகையில்,
இந்த சபையில் நேற்று நடந்த சம்பவம் வெட்கப்படக் கூடியது. இது போன்ற சம்பவங்களால் நம்மைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நேற்று அமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த உரிமைப் பிரச்சினையில் பத்திரிகைகளை சேர்க்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள முதல்வர், ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட என்பதால் தான் இப்படி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஜனநாயகத்தை மதிக்கும் இந்த ஆட்சியில் ஜனநாயக மரபுகளை அவமானப்படுத்தும் வகையில் நேற்று நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

பழைய முன் உதாரணங்களை வைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

அறவே அந்த உறுப்பினரை நீக்க வேண்டும் என்ற கடினமான தீர்மானம் வேண்டுமா என யோசிக்க வேண்டும். சபை இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தாலே போதும் என்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன்,

அதிமுக உறுப்பினர் போஸ் நடந்து கொண்ட விதம் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டனர்.

அவரது மக்கள் விரோத செயல் வெட்ட வெளிச்சமாகியது. அதிமுகவினர் நேற்று செய்த கூச்சல், குழப்பம் அனைத்தையும் மக்கள் அறிந்தனர். எனது இருக்கை அருகே வந்து குந்தகம் விளைவித்தல், சபைக் காவலரின் தொப்பியை எடுத்து வீசியதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்த நிகழ்ச்சி வீடியோவில் பதிவாகி இருந்ததை நானும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதை போட்டுப் பார்த்தோம். அதில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் காவலரின் தொப்பியை எடுத்து வீசுவது பதிவாகி உள்ளது.

சட்டசபையின் இறையாண்மையை காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் கடமையும் எனக்கு உள்ளது.

ஆனால் பேரவை தலைவரையே களங்கப்படுத்தும் வகையில் தொப்பியை வீசியிருக்கிறார். இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.

இதற்கு தண்டனை கொடுக்காவிட்டால் சபையின் தரம் தாழ்ந்துவிடும். எனவே உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழியுமாறு அவை முன்னவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து அவை முன்னவரான அமைச்சர் அன்பழகன் எழுந்து போஸ் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் கூறியதாவது:

சட்டமன்ற உரிமைகளையும், மாண்பினையும் நிலை நாட்டும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு. இந்த அவை மரபை காப்பாற்ற உறுப்பினர் போஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கேட்டுக் கொண்டனர்.

1986ம் ஆண்டு நானும் 10 உறுப்பினர்களும் தகுதி இழக்கும் நிலை உருவாக்கப்பட்டது. நான் இந்த அவைக்கு மாறாக அப்போது நடக்கவில்லை. ஆனாலும் அண்ணாவின் பெயரை கொண்ட கட்சி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

முதலமைச்சர் மீதும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதும் எதிர்க்கட்சி தலைவர் கொலை குற்றச்சாட்டு சொன்ன காரணத்தால் இது பற்றி நாட்டு மக்களுக்கு விளக்க நேற்று உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டது.

ஆனால், விளக்கம் சொல்ல விடாமல் அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.

பேரவையை நடத்த விடாமல் அமளி செய்தனர். பேரவை தலைவர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கட்டுப்படவில்லை.

சபைக் காவலர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிட்டபோது திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் காவலரின் தொப்பியை பிடுங்கி வீசியது உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். அதுவும் பேரவை தலைவர் மீது வீசுகிறார். தொப்பியை வீசுவதை விட காவலரின் தொப்பியை கழற்றுவது அதை விட பெரிய குற்றம்.

எனவே அவர் உறுப்பினராக இருக்கவே அருகதை அற்றவராக கருத வேண்டியுள்ளது.

ஆனால், முதல்வர் இதில் கடுமையான தண்டனை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

முதலில் போஸை 6 மாதம் சட்டமன்றத்தில் இருந்து நீக்கி வைக்க முடிவெடுக்கப்பட இருந்தது. முதல்வர் கேட்டுக் கொண்டதால் 6 மாதம் என்பதை குறைத்து அடுத்த சட்டசபை தொடர் தொடங்கி முதல் 10 நாட்கள் வரை போஸை சஸ்பெண்டு செய்ய அவை முடிவெடுத்துள்ளது.

இந்த காலத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினருக்குரிய எந்த ஆதாயமும் பெற முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவருக்குரிய ஊதியம், சலுகைகளைப் பெறவும் முடியாது என்றார் அன்பழகன்.

இதையடுத்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+