தமிழகத்தில் எல்காட் அமைக்கும் 9 'ஐடி பார்க்குகள்'
திருச்சி: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 6.1 கோடி சதுர அடி பரப்பளவில் 9 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக எல்காட் நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு வந்த உமாசங்கர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மற்றும் மதுரையில் தலா 2 ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காக்களின் மொத்தப் பரப்பளவு 6.1 கோடி சதுர அடியாக இருக்கும்.
சென்னையில் அமைக்கப்படவுள்ள இரு ஐடி பூங்காக்களும் பெரும்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் அமையும்.
பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக சோழிங்கநல்லூரில் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டில் மிகப் பிரமாண்டமான ஐடி பூங்கா அமையவுள்ளது.
தமிழக அரசும் தனது சார்பில் ஒரு ஐடி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் அமைக்கப்படும் ஐடி பூங்கா 377 ஏக்கர் பரப்பளவில் அமையும். இங்கு ஒரு ஐடி நிறுவனத்திற்கு பத்து ஏக்கர் இடம் தரப்படும்.
தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் அமையும் ஐடி பூங்காவுக்காக, ஒவ்வொரு நகரத்திற்கும் தலா ரூ. 1,500 முதல் ரூ. 2,000 கோடி வரை ஒதுக்கப்படும். இவை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
திருச்சியில் அமையவுள்ள ஐடி பூங்காவுக்காக 135 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இன்னும் பத்து நாட்களில் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு விடும்.
திருச்சி நாவல்பட்டு பகுதியில், 120 ஏக்கர் பரப்பளவில் 2வது கட்ட ஐடி பூங்காவுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக நிலம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.
சேலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஐடி பூங்கா அமையும். இதில் ஜெனித் சாப்ட்வேர் நிறுவனம் 8 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.
நெல்லையில் 500 ஏக்கர் பரப்பளவில் ஐடி பூங்கா அமையும். இதில் 100 ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.
ஐடி நிறுவனங்களுக்கு போட்டி நிறுவனமாக எல்காட் ஒருபோதும் செயல்படாது. ஆனால் ஐடி நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்பாகவே இது செயல்படுகிறது.
மீனவர்களுக்கு உதவுவதற்காக ரூ. 55 கோடி மதிப்பில் கடலோர கிராமங்களில் எச்சரிக்கை வானொலி திட்டத்தை எல்காட் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் கடலில் ஏற்படும் சூழ்நிலைகள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
இதற்கான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரியுள்ளோம். நிதி வந்தவுடன், முதல் கட்டமாக கடலோர கிராமங்களில் 20 சிக்னல் கோபுரங்கள் அமைக்கப்படும். மீனவர்களுக்கு 45 ஆயிரம் ரேடியோ கருவிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் உமாசங்கர்.












Click it and Unblock the Notifications