இசட் பிளஸ்: புல்லட் புரூப் அம்பாசிடர் காரை நிராகரித்த ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalithaசென்னை: குண்டுதுளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டதால் அதை வேண்டாம் என ஜெயலலிதா மறுத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தண்டபாணி என்ற நபர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தனக்கு 'உண்மையான' இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி சுகுணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞரும் அதிமுக எம்பியுமான ஜோதியும் அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விடுதலையும் ஆஜராயினர்.

அப்போது நடந்த விவாதத்தின் முழு விவரம்:

ஜோதி: ஜெயலலிதா ஒரு முன்னாள் முதல்வர். ஆனால், அவருக்கே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து தான் பாதுகாப்பு கோர வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில் தண்டபாணி என்பவர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் ஊடுருவிவிட்டார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதி: இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க ஏதாவது விதிமுறை உள்ளதா, இந்த விஷயத்தில் யாருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்?

ஜோதி: இந்த விவகாரம் மத்திய அரசை சார்ந்தது. 91ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீதிபதி: யார் இதை முடிவு செய்ய வேண்டும்?

ஜோதி: மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும், அதை மாநில அரசு பின்பற்ற வேண்டும். இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் போது தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால், அவர்கள் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள். வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை உள்ளது.

நீதிபதி: ஜெயலலிதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக ஏதேனும் உத்தரவு உள்ளதா?

ஜோதி: ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதாக 1991ம் ஆண்டு வாய்மொழியாக எங்களுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பும் தரப்பட்டது. எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவையும் மத்திய அரசு தரவில்லை.

அரசு வழக்கறிஞர் விடுதலை: பொதுவாக ஒய், இசட், இசட் பிளஸ் என எந்த பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து மாநில பாதுகாப்பு ஆய்வுக் கமிட்டி முடிவு செய்யும். இதையடுத்து தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும். போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு வழங்கும். ஜெயலலிதாவுக்கு தற்போதும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு தான் வருகிறது. உரிய போலீஸ் பாதுகாப்பும் தரப்படுகிறது. கடந்த மாதம் நடந்த பாதுகாப்பு ஆய்வுக் கமிட்டியின் கூட்டத்தில் கூட ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை தொடர்வது என்று தான் மாநில அரசு முடிவு செய்யப்பட்டது. தற்போது ஜெயலலிதா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் அந்தக் கமிட்டியின் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. எனவே வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

ஜோதி: வழக்கமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மத்திய அரசு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பெரும்பாலான போலீஸாரை வாபஸ் பெற்று விட்டது. மூன்று போலீசார் தான் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

நீதிபதி: ஜெயலலிதா கோரியபடி அனைத்து பாதுகாப்பு வசதிகளும் கொடுத்து விட்டீர்களா? குண்டு துளைக்காத கார் கொடுத்தீர்களா?

விடுதலை: ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது அந்த கார் வேண்டாம் என கூறிவிட்டார். பிரதமருக்குக் கூட அம்பாசிடர் கார் தான் வழங்கப்படுகிறது. அதே போல ஜெயலலிதாவுக்கும் அம்பாசிடர் கார் தான் வழங்கப்பட்டது. ஆனால், தனக்கு வழங்கப்பட்டது அம்பாசிடர் கார் என்பதால் அதை வேண்டாம் என ஜெயலலிதா நிராகரித்துவிட்டார் என்றார்.

இந்த வழக்கு விசாரணை 26ம் தேதி (நாளை) மீண்டும் நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+