வழிக்கு வந்த மத்திய அரசு; நீட் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என அறிவிப்பு!
டெல்லி: நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் சூடுபிடித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இது குறித்து அறிவித்திருந்தார். இருப்பினும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், அதன் பின்னர்தான் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் பிடிவாதம்
நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும், குறிப்பாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை. கடந்த ஒரு மாத காலமாக இந்த கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜந்தர் மந்தரின் இந்த போராட்டத்தில்.. மாணவர்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருந்தார்.
இந்த போராட்டம் ஜூலை 20ம் தேதி புதிய கட்டத்தை எட்டும், அன்றைய தினம் நாங்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படியே நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மாணவர்களும், இளைஞர்களும் அணிதிரண்டனர். இவர்களை தடுக்க போலீசார் பெரிய அளவில் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனாலும் அதையெல்லாம் உடைத்து அவர்கள் முன்னேறினர். இதனால் நாடாளுமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.
மறுபுறம் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தி மாணவர்கள் கலைக்கப்பட்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மாணவர்களின் போராட்டம் குறித்து பேசினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜூ, மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், விவாதம் நடக்க வேண்டும் எனில், முதலில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.. அதன் பின்னர்தான் விவாதமே நடக்கும் என்று எம்பிக்கள் முழக்கமிட்டனர்.


Click it and Unblock the Notifications
