ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடக அரசியலில் நேற்று ஏற்பட்ட அதிரடித் திருப்பத்தையடுத்து பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரியுள்ளார். இதையடுத்து ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள் தனித் தனியாக கடிதம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக ஆட்சிப் பொறுப்பில் 20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. திடீர் ஞானோதயம் வந்து பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் தனது மகனை தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார். இதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டார். ஆனால், அவரால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சோனியா காந்தி அவரை சந்திக்கவே மறுத்துவிட்டார்.
மேலும் கெளடா-குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள ஜனதா தள எம்எல்ஏக்களைக் கொண்டு கட்சியை உடைக்கவும், அவர்கள் உதவியோடு ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் முயன்றது.
இதற்காக ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அவருக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் கூறியது. இதையடுத்து அவர் கட்சியை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.
பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு (இவர்களது பெரும் ஆதரவு பாஜகவுக்கு உண்டு, பாஜக சார்பில் துணை முதல்வராக இருந்த எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்) கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமானார்.
இந் நிலையில்தான் தேவெ கெளடா பலத்த பல்டி அடித்து, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தார். இதற்கு குமாரசாமியும் ஆதரவு தெரிவித்தார்.
பலமுறை வருந்தி அழைத்தும் ஆதரவு தர முன்வராத மதச்சார்பற்ற ஜனதாதளம் தற்போது விரும்பி வாலண்டியராக தந்துள்ள ஆதரவால், பாஜக இன்ப அதிர்ச்சி அடைந்தது.
இந்த ஆதரவை பாஜக வரவேற்றது. இதையடுத்து இரு கட்சிகளும் தனித் தனியாக தங்களது சட்டசபைக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுதொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றின.
அதன் பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இக்கூட்டத்தில் மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார்.
இதையடுத்து வெங்கையா நாயுடு, குமாரசாமி, எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடா, மாநில மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் மிராஜுதீன் படேல் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தனர்.
ஆளுநரிடம், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கூறி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் கடிதம் ஒன்றை மிராஜூதீன் படேல் வழங்கினார். அதேபோல, பாஜக சார்பில் சதானந்த கெளடாவும் ஒரு கடிதம் கொடுத்தார்.
இரு கடிதங்களையும் பெற்றுக் கொண்ட ஆளுநர் தாக்கூர், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாக உறுதியளித்தார்.
இதையடுத்து வெங்கையா நாயுடு, எடியூரப்பா ஆகியோர் மீண்டும் ஆளுநரை தனியாக சந்தித்தனர். ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் கொடுத்தனர்.
ஆளுநர் உத்தரவு:
இரு கட்சிகளின் கோரிக்கைகள், கடிதங்களைப் பரிசீலித்த ஆளுநர் தாக்கூர், புதிய உத்தரவு ஒன்றை இரு கட்சிகளுக்கும் பிறப்பித்துள்ளார். அதன்படி இரு கட்சிகளின் தலைவர்கள் வழங்கியுள்ள ஆதரவுக் கடிதம் மட்டும் போதாது. மாறாக, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் தனித் தனியாக தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிபந்தனையை நிறைவேற்றுவோம் என இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த நேரத்திலும் ஆட்சி அமைக்க அழைப்பு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் எம்.எல்.ஏக்கள் பெங்களூரை விட்டு அகலக் கூடாது என்று இரு கட்சிகளின் தலைமையும் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு கர்நாடகத்தில் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் அல்லது சட்டசபையைக் கலைக்க முயலலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரகாஷ் அதிருப்தி:
இதற்கிடையே, முதல்வர் பதவியின் பக்கம் வரை வந்து ஏமாந்து போயுள்ள முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் இந்த முடிவு கட்சி எம்.எல்.ஏக்களின் கருத்துக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் பேசி முடிவெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெயரை மாற்றிய எடியூரப்பா:
இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பி.எஸ்.எடியூரப்பா, தனது பெயரை பி.எஸ்.எட்டியூரப்பா என்று மாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக கடந்த 11ம் தேதி தனது பெயரை மாற்றி அரசு கெஜட்டிலும் இடம் பெறச் செய்துள்ளார்.
இனிமேல் தன்னை எல்லோரும் எட்டியூரப்பா என்றே கூப்பிடுமாறும் அவர் செய்திக்குறிப்பின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications