கூட்டணி தொடர்ந்தால் பல வெற்றிகளைப் பெறலாம்: கருணாநிதி
சேலம்: தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி அப்படியே தொடர்ந்தால், மேலும் பல வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேலம் ரயில் கோட்டம் நேற்று மாலை நடந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதி ரயில் கோட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், இது விழா அல்ல, மாநாடு. லாலு பிரசாத் யாதவும், இணை அமைச்சர் வேலுவும் வியக்கத்தக்க வகையில் இந்த விழாவினை நடத்தியுள்ளனர்.
முன்பு தேவெ கெளடா பிரதமராக இருந்தபோது சேலம் வந்திருந்தார். அப்போது அவரிடம், சேலம் கோட்டம் தொடர்பாக கோரிக்கை வையுங்கள் என்று என்னிடம் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கோரினர். ஆனால் இப்போது தேவையில்லை, பிறகு சொல்கிறேன் என்று நான் பதிலளித்தேன்.
ஏனென்றால் நான் சொன்னால் எப்படி காவிரி பிரச்சினைக்கு ஆம், ஆம் என்று தேவெ கெளடா தலையசைத்து விட்டு பிறகு தனது முடிவை இல்லை என்று அறிவித்தாரோ, அதேபோலத்தான் இதுவும் ஆகும் என்பதால் பிறகு சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் விட்டபாடில்லை. இதனால் நான் அவரிடம் கேட்டன். அதற்கு அவர் மேடையிலேயே கருணாநிதி கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இந்த உறுதிமொழி காற்றில் பறந்து போய் விட்டது. ஆனால் அது பறந்து போன காரணத்தினால்தான், அதற்குப் பிறகு நாம் எடுத்த அதி தீவிர முயற்சிகள், நம்மவர்களே பொறுப்பிலே அமரக் கூடிய நிலை, அந்த நிலையினால் ஏற்பட்ட வெற்றியாக இன்றைக்கு சேலத்தை தனி ரயில்வே கோட்டமாக உருவாக்குகின்ற ஒரு உன்னதமான நிலை வாய்த்திருக்கிறது.
நாற்பது இடங்களில் நாடாளுமன்றத்தில், நம்முடைய அணியைச் சேர்ந்தவரகள் வெற்றி பெற்று அங்கே அமைச்சர் பொறுப்புகள் பலவற்றை ஏற்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு - இந்த சேலம் திட்டம் உள்பட நமக்கு மத்திய அரசு மூலமாக கிடைத்திருக்கின்ற நன்மைகளையெல்லாம் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் முரண்படாமல் ஒன்றோடொன்று இணைந்து செல்லுமானால், பல நன்மைகளைப் பெற முடியும். இந்த விழா அதற்கு ஒரு உதாரணம்.
இரண்டு தண்டவாளங்கள் இணைந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இருக்கின்ற காரணத்தினால்தான் ரயில் ஒழுங்காகப் போக முடிகிறது. அதைப் போல மத்திய அரசும், மாநில அரசும் இரண்டு தண்டவாளங்களாக இருக்குமேயானால், இப்படிப்பட்ட அரிய வெற்றிகளையெல்லாம் நாம் பெற முடியும்.
அதுபோலவே தமிழ்நாட்டிலே நாம் காட்டுகிற ஒற்றுமை, ஒரு புகை வண்டித் தொடரில் இருக்கிற வண்டிகளைப் போல, பெட்டிகளைப் போல நாம் இன்றைக்கு இருக்கிறோம். இந்தப் பெட்டிகளிலே ஒரு பெட்டி தவறினாலும், ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கினாலும் அந்த ஒரு பெட்டியோடு மாத்திரமல்ல, மற்ற பெட்டிகளையும் அது இழுத்துக் கொண்டு தண்டவாளத்தை விட்டு இறங்க நேரிடும். அதற்கு இடங்கொடுக்காமல் நாம் இந்த ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வோம்.
இந்த ரயில் பெட்டிகளை இணைத்த இந்த ரயிலை நாம் நடத்திக் கொண்டிருப்போம். இந்த புகை வண்டித் தொடர் தன்னுடைய பயணத்தை நடத்தட்டும். இது என்றைக்கக் கவிழும், என்றைக்கு இது கீழே விழும், எந்தப் பாலத்தில் விழும், எந்த வெள்ளத்தில் சிக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிற பல பேர் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இடம் தராமல் அவர்களுடைய முகத்திலே கரியைப் பூசி நம்முடைய பயணம் தொடருமேயானால், இதைப் போன்ற இன்னும் பல வெற்றிகளை இந்தத் தமிழகம் பெற முடியும். நம்மால் பெற்றுத் தர முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்குரியவர்கள். எப்படி என்றால், இங்கே டாக்டர் ராமதாஸ் சொன்னதைப் போல நன்றி செலுத்த வேண்டியது எனக்கல்ல, அல்லது மேடையிலே அமர்ந்திருக்கின்ற தோழமைக் கட்சிகளுடைய தலைவர்களுக்கல்ல, ரயில்வே அமைச்சருக்கு அல்ல, துணை அமைச்சருக்கல்ல, இணையமைச்சருக்கல்ல, எங்களையெல்லாம் அந்த இடத்திலே உட்கார வைத்து வேலை வாங்குகின்ற, தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். அந்த நன்றியை அடிக்கடி செலுத்தி, தமிழகம் வளம் பெற, தமிழகம் வாழ்வு பெற, நலம் பெற வழி காட்டுங்கள் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications