சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங். தலைவருக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil


Clashed in sathiyamurthi bhavan சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஒரு கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி சமீபத்தில் முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். வேல் கம்பால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த பரபரப்பு இப்போதுதான் மெல்ல அடங்கியது. ஆனால் அதற்குள் இன்று காலை சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதற்காக எம்.எல்.ஏக்கள், அவர்களின் ஆதரவாளர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் அலைமோதியது.

அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல் திமுதிமுவென உள்ளே ஓடி வந்தனர். அவர்களின் கைகளில் அரிவாள்கள், உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

உள்ளே வந்த அந்தக் கும்பலைப் பார்த்து காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். அக்கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்துத் தாக்கியது.
Clashed in sathiyamurthi bhavan
பின்னர் முதலாவது மாடிக்கு ஓடியது. அங்குள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் அறைக்குள் புகுந்த அக்கும்பல் மயூரா ஜெயக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் மயூரா ஜெயக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சீனிவாசன், ராஜமாணிக்கம் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த மூன்று பேரையும் உடனடியாக காங்கிரஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவன் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது. காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தாக்கிய மர்ம கும்பல் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் கும்பலைத் தேடி வருகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளானவர்களில் ராஜமாணிக்கம் கே.கே.நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆவார். சீனிவாசன், ஜெயக்குமாரின் உதவியாளர் ஆவார்.

படுகாயமடைந்த ஜெயக்குமார் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை அரிவாள், கத்தி, பிளேடு, பேனாக் கத்தி உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஏன் தாக்குதல்?

சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 பேரை சஸ்பெண்ட் செய்தார் மயூரா ஜெயக்குமார். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்திருந்தனர்.

இன்றைய தாக்குதலின்போது வில்லியம்ஸ் தலைமையில்தான் 20க்கும் மேற்பட்ட கும்பல் உள்ளே புகுந்து தாக்குதல் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம்ஸ் சென்னை மாநகராட்சியின் 132வது வார்டைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு:

முன்னதாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. முதலாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதுதான் மயூரா ஜெயக்குமார் கோஷ்டி மோதலின் விளைவாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

இந்தத் தகவல் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குத் தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கூட்டம் அவசரம் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 35 எம்.எல்.ஏக்களில் 30 பேர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+