ஜனவரி முதல் வாரத்தில் பாக். தேர்தல்: முஷாரப் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும், நவம்பர் 15ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அவசர நிலையை அறிவித்த முஷாரப்புக்கு உலக அளவில் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. உள்நாட்டிலும் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவும் முஷாரப்பின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும், ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என முஷாரப்புக்கு கண்டிப்பு கலந்த கோரிக்கையை அமெரிக்கா விடுத்தது.
இந்த நிலையில் பெனாசிர் பூட்டோவை வீட்டுக் காவலில் வைத்து மேலும் கண்டனங்களை வாரிக் கட்டிக் கொண்டார் முஷாரப். உலக அளவில் மறுபடியும் கண்டனங்கள் குவியவே பெனாசிரை விடுவித்தார்.
அதிகரித்து வரும் எதிர்ப்புகளையடுத்து பெரும் நெருக்கடியில் மூழ்கிய முஷாரப் தற்போது தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி பாகிஸ்தானில் ஜனவரி முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும். வருகிற 15ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும். பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாண சட்டசபைகள் நவம்பர் 20ம் தேதி கலைக்கப்படும் என முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.
நவம்பர் 15ம் தேதி இடைக்கால அரசு மத்தியில் பதவியேற்கும். அதேபோன்ற இடைக்கால அரசுகள் மாகாணங்களிலும் பதவியேற்கும்.
உச்சநீதிமன்றத்தில் எனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்தபிறகு நான் ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகி விடுவேன். அது நவம்பர் 15ம் தேதியன்று கூட நடக்கலாம்.
இது, நான் பதவியில் தொடர்ந்து நீடிக்கவும், ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்கவும் முயற்சிப்பதாக கூறப்படும் அவதூறை போக்கும் என்று நம்புகிறேன் என்றார் முஷாரப்.












Click it and Unblock the Notifications