சிறுநீரக மோசடி: டாக்டர்களுக்கு உதவிய வழக்கறிஞர்களை கைது செய்ய வந்த போலீஸ் மும்பை
சென்னை: டாக்டர்களுக்கு போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து சிறுநீர மோசடி செய்ய உதவி புரிந்த வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய மும்பை போலீசார் சென்னை வந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் டாக்டர் ரவிச்சந்திரன். இவர் பலரை ஏமாற்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த குற்றத்திற்காக மும்பை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், சென்னையில் இவர் அறுவை சிகிச்சை நடத்திய தி.நகர் மற்றும் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை, செயின்ட் தாமஸ் மருத்துவமனை ஆகியவற்றிலும் மும்பை போலீசார் சோதனை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி அந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தனர். இந்த மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்த வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இது தொடர்பாக டாக்டர் ரவிச்சந்திரனுக்கு உதவியாக இருந்த ஒரு டாக்டர் மும்பை போலீசாரிடம் நேரில் சென்று சரணடைந்து விட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை, நேபாளம், பர்மா, மற்றும் வங்கதேசம் உட்பட பல இடங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகளை சென்னைக்கு அழைத்து வந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
பணத்திற்கு கஷ்டப்படும் ஏழை அப்பாவி மக்களை புரோக்கர்கள் மூலம் ஏமாற்றி ரூ.20,000க்கு சிறுநீரகத்தை எடுத்துக் கொண்டு அதனை வசதி படைத்தவர்களுக்கு பல லட்சங்கள் வரை பேரம் பேசி விற்று (ஆபரசேன் செய்து பொறுத்தி) வந்துள்ளனர் இந்த டாக்டர்கள்.
சிறுநீரகம் கொடுத்த பலருக்கும் கூட பேசப்பட்ட பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இவ்வாறு ஏமாற்றபட்ட சிலர் போலீசிலும் புகார் தந்தனர்.
சிறுநீரக ஆபரேசன் செய்யும்போதும் அதற்கு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் மூலம் ஆவணங்கள் தயாரிக்க வேண்டும் என்பதால் சில வக்கீல்களை மருத்துவமனைகளே நிரந்தரமாக ஏற்பாடு செய்து அதற்கான ஆவணங்களை தயாரித்துள்ளன.
சிறுநீரகம் கொடுப்பவர்கள் தங்களுடைய சிறுநீரகத்தை தெரிந்தவருக்கோ உறவினருக்கோ சிறுநீரகத்தை தானமாக கொடுப்பது போல எழுதி வாங்குவதற்கான ஆவணங்களை தயாரிப்பது தான் வழக்கறிஞர்களின் வேலை.
இது சம்பந்தமான ஆணவங்கள் அனைத்தும் தற்போது மும்பை போலீசார் வசம் இருப்பதால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய 3 மும்பை போலீஸ் உயரதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர்.
சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரிடமும், மருத்துவக் கல்வி இயக்குனரிடமும் சில விவரங்களைத் திரட்டிவிட்டு வழக்கறிஞர்களை அவர்கள் கைது செய்யலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications