சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல்

உ.பி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பயங்கரம் இன்னும் விலகாத நிலையில் டெல்லியைச் ேசர்ந்த இந்தியா டிவி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று காலை ஒரு இ மெயில் வந்தது.
குருபாய்ஸ் 2000 என்ற பெயரில் வந்த அந்த இமெயில் ரியாத்திலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்தது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் மெயிலைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அந்த மெயிலில், சென்னை கே.கே. நகரில் வருகிற 30ம் தேதியும், உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் டிசம்பர் 10ம் தேதியும், டெல்லியில் உள்ள ஜே.ஜே. காலனியில் டிசம்பர் 25ம் தேதியும், மும்பையில் உள்ள மேற்கு முலுந்த் பகுதியில் டிசம்பர் 28ம் தேதியும், கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் மற்றும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஜனவரி 1ம் தேதி குண்டு வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மெயில், கிழக்கு டெல்லியில் உள்ள இன்டர்நெட் மையத்திலிருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து சென்று அந்த இணையதளத்தின் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈ-மெயில் மிரட்டல் தவிர தடை செய்யப்பட்ட சில தீவிரவாத இயக்கங்களும் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை தகர்க்க போவதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதுகாப்பு:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ராஜீவ் சுக்லா திருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உஷார்:
சென்னைக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறியதாவது, சென்னையில் முக்கிகய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளன. நீதிமன்றங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications