மருத்துவ மாணவர்களை தூண்டி விடுகிறார்கள்: ராமதாஸ் புகார்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது மகன் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பதால் அவரது துறை தொடர்பான சில பிரச்சனைகளுக்கு கருத்து கூறுவதை இதுநாள் வரை தவிர்த்து வந்தேன்.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக தலைவர் வேணுகோபால் ஆதிக்க சக்திகளின் பக்கபலத்துடன் விஞ்ஞான கழகத்தை பாழ் படுத்தியதால் பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அன்புமணிக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. இப்போது மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை அரசியல் ஆக்கிவிட்டனர். எனவே நான் பதில் அளிக்கிறேன்.
மருத்துவ மாணவர்களின் படிப்புக் காலம் 5 ஆண்டிலிருந்து 6 ஆண்டாக உயர்த்தப்படுவதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த ஒரு ஆண்டில் 4 மாதம் மட்டுமே கிராமப்புறங்களில் சேவை செய்ய சொல்கிறார்கள்.
ஏற்கனேவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 15,000க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பலர் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்தில் ஊசி போடுதல், ரத்த அழுத்தம் பார்த்தல் போன்ற வேலைகளை செய்கிறார்கள்.
கிராமப்புறங்களில் வேலை செய்வதால் ரூ.8,000 ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலை பார்க்காவிட்டால் அபராதமும் விதிக்கப்படுகிறது.
எந்த மாநிலத்திலும் இதை எதிர்த்து மாணவர்கள் போராடவில்லை. மேலும் ஓராண்டு கிராமப்புற பணி என்பது பேச்சளவில்தான் இருக்கிறது. இன்னும் அதை சட்டமாக்கவில்லை. அதற்குள் ஏன் இந்த போராட்டம்?
எம்.பி.பி.எஸ். படிக்கும் போதே மேல் படிப்புக்கும் சேர்த்து சிலர் லட்சக்கணக்கில் பணம் கட்டி ஏற்பாடு செய்து விடுகிறார்கள். அவர்களுடைய தூண்டுதலும் இதில் இருக்கிறது.
பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த டாக்டர்கள் அமைப்பில் இடம் பெற்றுள்ள ஒருவர்தான் முதலில் இதை தூண்டி விடுகிறார். மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு குழுவையும் அன்புமணி அமைத்தார். அப்படியிருந்தும் போராட்டம் தொடர்வது ஏன்.
மத்திய அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும், முதல்வர் பேசிய பின்னரும் வீதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். மெரீனாவில் பேரணி நடத்துகிறார்கள். வினோதமான போராட்டங்களை எல்லாம் நடத்துகிறார்கள்.
இது ஒரு சட்டக்கல்லூரி அல்லது இன்ஜீனியரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டமாக இருந்திருந்தால் விடுதிகளை மூடியிருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் துறை அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட அமைச்சகமோ எதுவும் செய்யவில்லை.
ஏற்கனவே அகில இந்திய அளவில் நடந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கிராமப்புற சேவைக்கான சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது எப்படி இருக்கிறது?. அந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சரும் கலந்து கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். இது எப்படி இருக்கிறது?.
திராவிட கட்சிகள் 39 வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளன. அனைத்து கிராமப்புற சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் எந்த நேரமும் இருக்கிறார்கள். தரமான சிகிச்சையளிக்கப்படுகிறது என்று பகிரங்கமாக அறிவிக்க தயாரா?.
ஒரு டாக்டர் என்ற முறையில் என்னுடைய வேண்டுகோள் என்வென்றால், மருத்துவ மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நலன் மிகவும் முக்கியமானது. சென்னை மருத்துவக் கல்லூரி புகழ் பெற்றது. மாணவர்கள் போராட்டத்தை அரசியல் ஆக்கிவிட்டார்கள். அரசியல்வாதிகள் உள்ளே சென்று பேசுமளவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தாதாக்கள், கூலிப்படைகள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாக நான் ஏற்கனேவே கூறியிருந்தேன். அவர்களை ஒழிப்பதற்காக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். இந்த தாதாக்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக செயல்படுவது யார் என்பது காவல் துறைக்கு தெரியும். இதனை காவல்துறை ஆணையரே ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ரவுடிகளை ஒழிப்பதற்கான தனி சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். வன்முறை கலாச்சாரத்தை தடுப்பது எப்படி என்பது பற்றி அடுத்த மாதம் 4ம் தேதி சென்னையில் கருத்தரங்கு நடத்துகிறோம்.
இந்தியன் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரமாக 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை. சென்னை நகரம் மக்கள் வாழ லாயக்கற்றது. இது நரகம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்ட ஒரு தீர்ப்பிலேயே உள்ளது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications