மருத்துவ மாணவர்கள் போராட்டம் நீடிப்பு: கல்லூரிகள், விடுதிகள் மூடல்

Subscribe to Oneindia Tamil


சென்னை: கட்டாய கிராம சேவையை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் நடத்தும் போராட்டம் அரசு எச்சரிக்கையை மீறி தொடர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து மருத்துவக் கல்லூரிகளையும், கல்லூரி விடுதிகளையும் தமிழக அரசு இன்று மூடிவிட்டது.

மருத்துவப் படிப்பை ஒரு வருடம் வரை நீட்டித்து அந்த கால கட்டத்தில் மாணவர்கள் கிராம பகுதிகளில் மருத்துவ பணி ஆற்றவும், அவர்களுக்கு மாதம் ரூ. 8,000 உதவித்தொகை வழங்கவும் மத்திய நலத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆனால், இதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்படிப்பு முடிந்த பிறகு அரசு டாக்டர் வேலைக்கு நியமனம் செய்தால் கிராமப்புற சேவை செய்ய தயார் என அவர்கள் கூறுகின்றனர். படிக்கும் காலத்திலேயே சென்று பணியாற்ற முடியாது என கூறி வருகின்றனர்.

உண்ணாவிரதம், கண்களை கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி, மொட்டை அடித்து என பல விதமான போராட்டங்களாக நடத்தி வருகின்றனர். இவர்களை மற்ற கட்சியினர் தூண்டி விட்டு வருவதாகவும், அன்புமணிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேண்டுமென்றே வேடிக்கை பார்த்து வருவதாகவும், மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார்.

இதையடுத்து மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பையும் ராமதாஸ் கண்டித்தார்.

இந் நிலையில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுள்ளது. இதையடுத்து இன்றைக்குள் (3ம் தேதி) போராட்டத்தை கைவிடாவிட்டால் மருத்துவ மாணவ-மாணவியர் விடுதிகளும், மருத்துவக் கல்லூரிகளும் மூடப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

ஆனாலும் இன்றும் போராட்டம் தொடர்கிறது. இன்றும் அவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதையடுத்து மாணவ-மாணவியர்களின் விடுதிகள் மூடப்பட்டுவிட்டன. மேலும் மருத்துவக் கல்லூரிகளும் மூடப்பட்டன.

நெல்லை மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவே மாணவிகள் அனைவரும் விடுதிகளை விட்டு வெளியேறி விட்டனர். மாணவர்கள் இன்று காலை வெளியேறினர். இன்று காலை முதல் கல்லூரியும், விடுதியும் மூடப்பட்டுள்ளது.

அதேபோல நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியும் விடுதியும் மூடப்பட்டு விட்டது. நேற்று இரவே இந்தக் கல்லூரியின் விடுதியை கல்லூரி நிர்வாகம் மூடி விட்டதாம்.

தமிழகம் முழுவதும் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளும், விடுதிகளும் இன்று காலை மூடப்பட்டு விட்டன.

மாணவர்களுக்கு அரசு டாக்டர்கள் ஆதரவு

இந் நிலையில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்துக்கு அரசு டாக்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மாநிலத் தலைவர் கனகசபாபதி கூறுகையில்,

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை 6 ஆண்டு காலமாக அதிகரிப்பது சரியல்ல. இதை எதிர்க்கும் மாணவர்களின் போராட்டம் நியாயமானது.

மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் வரும் 5ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கிறோம்.

வன்முறையில் ஈடுபடாமல் போராட மாணவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அப்படி போராடும்போது கல்லூரிகள், விடுதிகளை மூடுவது சரியல்ல.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி, பிரதமர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், தமிழக முதல்வர் மற்றும் மாநில சுகாதார அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பவுள்ளோம்.

இந்த முடிவுகள் திருச்சியில் நடந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றார்.

'குட்டிக்கரணம்' அடித்து போராட்டம்:

இதற்கிடையே, நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூதனப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். அதாவது தரையில் குரங்கு போல குட்டிக்கரணம் அடித்துப் போராடப் போவதாக அறிவித்துள்ளனர். மருத்துவப் படிப்புக் காலத்தைக் கூட்டினால், வேலை கிடைக்காமல், குரங்காட்டி வித்தை காட்டிப் பிழைக்கத்தான் நேரிடும் என்பதை விளக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து 5 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

குடிநீர், மின்சார விநியோகம் துண்டிப்பு:

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று தங்களது கல்லூரி வளாகங்களில் கூடி நாடகங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கல்லூரி மாணவர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு கல்லூரி விடுதி மூடப்பட்டு விட்டது. மேலும் குடிநீர், மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டு விட்டது.

சேலம் மருத்துக் கல்லூரி விடுதியும் மூடப்பட்டு குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

காலவரையற்ற உண்ணாவிரதம்:

இதற்கிடையே, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மருத்துவ மாணவர்கள் நிராகரித்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் மற்றும் ஹவுஸ் சர்ஜன் கவுன்சில் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள மாணவர்ள் இன்று காலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடி தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்த தீர்மானித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

இதுகுறித்து கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அரசு கல்லூரிகளையும், விடுதிகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தாலும் அதைக் கண்டு பயப்படாமல் எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+