திருவல்லிக்கேணி லாட்ஜில் கத்தை கத்தையாக நோட்டுகள்.. மாட்டிய மலேசியா புவனேஸ்வரி.. சிக்கிய கும்பல்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த நோட்டுகளை மலேசியாவில் இருந்து விமானம் வழியாக சென்னைக்கு கொண்டுவந்ததாக கூறப்படும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி விமானத்தில் கொண்டுவர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மலேசியாவை சேர்ந்த பரிமளா, புவனேஸ்வரி ஆகிய 2 பெண்கள் இந்த கள்ளநோட்டு கும்பலோடு தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் புவனேஸ்வரி சிக்கியுள்ளார். பரிமளா தப்பியோடிவிட்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள், கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டிருககிறது. இந்த நோட்டை பதுக்கி வைத்திருந்ததாக சென்னை திருவல்லிக்கேணியில் டிராவல்ஸ் வைத்திருக்கும் ஷமீக் ரகுமான் (37) என்பவரை கைது செய்துள்ளனர். துணி வியாபாரி என்று கூறி ஒரு குறிப்பிட்ட 'லாட்ஜில்' தங்கியிருந்து கொண்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஷமீக் ரகுமானிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், ரூ.11.21 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகளும் மற்றும் 25 ஆயிரம் 'யூரோ கரன்சி' நோட்டுகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 4 'பாஸ்போர்ட்டுகளும்' பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும், போலீசார் கைது செய்திருக்கிறார். அவரையும் சென்னைக்கு கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.
ரவிச்சந்திரனிடம் இருந்து ரூ.22.79 லட்சம் உண்மையான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரிடம் இருந்தும் ரூ.34 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், ரூ.34 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் இவர்கள் விட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இவர்களிடம் கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கள்ள நோட்டுகளை மலேசியாவில் அச்சடித்ததாக கூறப்படுகிறது கைதான ரவிச்சந்திரன், மலேசியாவில் சில காலம் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். அப்போது கள்ளநோட்டு கும்பலோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறதாம்.
மலேசியாவை சேர்ந்த பரிமளா, புவனேஸ்வரி ஆகிய 2 பெண்கள் இந்த கள்ளநோட்டு கும்பலோடு தொடர் உள்ளதாம். அவர்கள் இருவரும் மாம்பலத்தில் உள்ள ஒரு 'லாட்ஜில்' தங்கிய உள்ளார்கள், போலீசார் அவர்களை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது, பரிமளா தப்பி ஓடிவிட்டார். புவனேஸ்வரி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
கள்ளநோட்டுகள் மலேசியாவில் இருந்து, விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நம்பும்படியாக இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் விமானத்தில் எப்படி கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது.அதுபற்றி தீவிர விசாரணை நடக்கிறது. தப்பி ஓடிய பரிமளாவுக்குத்தான் எப்படி கொண்டு வந்தார் என்பது தெரியும் என புவனேஸ்வரி கூறியிருக்கிறாராம். எனவே பரிமளாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூ.1.10 கோடி அளவுக்கு, மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்ததாக கருதும் போலீசார், அவற்றில் கணிசமான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் போலீசார் நினைக்கிறார்கள். கைதான 'டிராவல்ஸ்' அதிபர் ஷமீக் ரகுமான், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு உதவியதாக சொல்லப்படுகிறது. முழு விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவல்கள் தெரியவரும்.














Click it and Unblock the Notifications