அரிசிக்குப் பதில் பால், முட்டை சாப்பிட கேரள அமைச்சர் யோசனை!

அமைச்சர் திவாகரன், திருச்சூரில் நடந்த விழா ஒன்றில் பேசுகையில், அரிசிச் சாப்பாட்டை மக்கள் விட்டொழிக்க வேண்டும் என்று கூறினார்.
அவர் பேசுகையில், அரிசியைத்தான் நாம் சாப்பிட வேண்டுமா. முட்டை, பால், போன்றவற்றை சாப்பிட்டால் சத்து வராதா. தமிழகத்திலிருந்துதான் நமக்கு அதிக அளவில் அரிசி வருகிறது.
அரிசிக்காக தமிழகத்திடம் நாம் கையேந்துவதை நிறுத்த வேண்டும். இனிமேல், முட்டை பால் போன்றவற்றை சாப்பிட்டுப் பழக வேண்டும். அரிசியை விட்டொழிக்க வேண்டும் என்றார் திவாகரன்.
அவரது இந்தப் பேச்சுக்கு கேரளாவில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மக்களிடையே கேலிப் பொருளாக மாறிப் போயுள்ளார் திவாகரன்.
காங்கிரஸ் கட்சியினர் ஒரு படி மேலே போய், திவாகரனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டுக்கு பால், முட்டை, கோழி, இறைச்சி போன்றவற்றை பார்சல்களில் அனுப்பி எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறினால், முதலில் திவாகரன் தனது பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும். அதற்குப் பதில் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கூறியுள்ளனர்.
அரிசிச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் பலர் உள்ள நிலையில் முட்டையும், பாலும் சாப்பிட வேண்டும் என்று அமைச்சர் கூறியிருப்பது முட்டாள்தனமானது. இவரை இனியும் அமைச்சர் பதவியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முதல்வர் அச்சுதானந்தனை கேரள காங்கிரஸ் (பி) தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை வலியிறுத்தியுள்ளார்.
அமைச்சர் அலுவலகம் விளக்கம்
இதற்கிடையே, அமைச்சர் திவாகரன் முட்டை, பால் சாப்பிட்டுப் பழக வேண்டும் என பேசவில்லை என அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து திவாகரனின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முட்டை, பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினார்.
இதன் மூலம் பிற மாநிலங்களை கேரளா நம்பியிருக்கும் நிலை மாறும் என்ற அர்த்தத்தில்தான் அமைச்சர் பேசினார்.
தற்போது வருடந்தோறும் ரூ. 1900 கோடி அளவுக்கு முட்டை, கோழி, பால் போன்றவற்றை கேரள பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அமைச்சர் பேசினார். ஆனால் அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications