கிறிஸ்துமஸ், பொங்கல்: நிரம்பிய ரயில்கள்-தவிக்கும் பயணிகள்
சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வழக்கமான ரயில்களும் நிரம்பி விட்டன. இதனால் பண்டிகைகளுக்கு ஊர் செல்ல முடியுமா என்ற தவிப்பில் பயணிகள் உள்ளனர். இதையடுத்து சிறப்பு ரயில்களை விட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
வருகிற 25ம் தேதி வரும் கிறிஸ்துமஸ், அடுத்த ஜனவரியில் வரும் தமிழர் திருநாளான பொங்கல் ஆகிய பண்டிகைகளை ஒட்டி வழக்கமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்ளுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி விட்டன.
இதையடுத்து சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்களும் கூட நிரம்பி விட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஊர் செல்ல முடியுமா என்ற சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒவ்வொரு சிறப்பு ரயிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
போவதற்கு மட்டுமல்லாமல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காரணம் கிறிஸ்துமஸுக்கு நான்கு நாட்கள் பின்னாலும், பொங்கலுக்கு பின்னால் சில நாட்களும் என ரிட்டர்ன் ரயில்களிலும் இடமில்லை.
சபரிமலை சீசன் வேறு நடப்பதால் பக்தர்களுக்காக தனி ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதுவும் கூட நிரம்பி வழிகிறது. தற்போது பள்ளிகளில் நடந்து வரும் அரையாண்டுத் தேர்வுகள் முடியவுள்ளன. இதனால் குடும்பத்துடன் ஊர் செல்ல விரும்பும் தென் மாவட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தென் மாவட்டங்கள் என்று மட்டுமல்லாமல் மேற்கு பகுதி ஊர்களுக்கும் ரயில்களில் இடமில்லை. கோவை, ஈரோடு, சேலம் பகுதி மக்கள் இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பெருமளவில் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால் மேலும் சில சிறப்பு ரயில்களை விட தெற்கு ரயில்ேவ தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அடுத்த வாரம் சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications