தமிழிசையை வளர்க்க திராவிட ஆட்சிகள் உதவவில்லை - ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட ஆட்சிகளில் தமிழிசை வளர்ச்சிக்கும், தமிழிசைக் கலைஞர்கள் முன்னேற்றத்திற்கும் எதுவும் செய்யப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் 5வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மற்ற இசைக்கு நிகராக தமிழ் இசை வளர்ச்சி அடையவில்லை. கடந்த 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழிசை கலைஞர்களுக்கும், தமிழ் இசைக்கும் எந்த பயன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை.
எனது கருத்தில் எந்த அரசியலும் இல்லை. தமிழ் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழிசை கலைஞர்கள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு நல்ல ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தமிழ் பாடம் படிக்காமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியை படித்தால் தான் பட்டம் பெற முடிகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தமிழ் இசையை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். இதை நாங்கள் 5வது ஆண்டாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இசை நிகழ்ச்சிகளில் தெலுங்கு கீர்த்தனைகள்தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தமிழிசைக்கும், தமிழிசைக் கலைஞர்களுக்கும் அங்கு இடம் இல்லை. இதுவரை பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளும் தமிழிசைக் கலைஞர்களுக்குத் தரப்பட்டதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
தமிழக மக்கள் மற்ற இசைக் கருவிகளை போல நாதசுவரம், தவில் போன்றவற்றையும் கற்றுக் கொண்டு தமிழ் இசையை வளர்க்க வேண்டும்.
தமிழ் இசைக் கலைஞர் நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் மணி மன்றம் சார்பில் விழா எடுக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக 60 ஆண்டுகளாக தமிழ் பண்ணிசை வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தர்மபுரம் பி.சுவாமிநாதனுக்கு தமிழ்மாமணி விருதினை ராமதாஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் நீதிபதி டி.என். வள்ளிநாயகம், பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத் தலைவர் ஜே.வி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications