தமிழகம் முழுவதும் கன மழை, வெள்ளம்-15 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

Rain

சென்னை: தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் தமிழகமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

திங்கள்கிழமை இரவு ஆரம்பித்த மழை புதன்கிழமை காலை வரையிலும் தொடர்ந்து வெளுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் இன்று அதிகாலையில்தான் மழை சற்றே ஓய்ந்தது.

தொடர்ந்து பெய்து வந்த மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாக காணப்படுவதால் பல பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் இதே நிலைதான். மதுரையில் நேற்று காலை முதல் பெய்த தொடர் மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடலுக்குள் போன 15 படகுகள்:

கடலூர் மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 2 நாட்களாக இந்த மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காணப்படுகிறது.

மரக்காணம் பகுதியில் கடல் கொந்தளிப்பு மற்றும் ராட்சத அலைகள் எழுந்ததன் காரணமாக 15 படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் நான்கு விசைப் படகுகள் தரை தட்டி மோதி நின்றன. இதில் படகுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் 4 பேர் சாவு:

திருச்சியில் பெய்த கன மழைக்கு வீட்டுச் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கன மழை காரணமாக, ஆண்டாள் நகரில் உள்ள வீடு ஒன்று இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த ஜானகிராமன் (43), அவருடைய மனைவி ஜோதி பாய் (36), மகன்கள் மகேஷ் (17), மணிகண்டன் (10) ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் மேலும் 11 பேர் பலி:

அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் இன்று அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில் சமுத்திரம் என்ற தொழிலாளியும், அவரது மனைவி முத்துலட்சுமியும் பலியாயினர்.

சென்னை ஆவடியில் வீடு இடிந்து சீனு (30) என்ற கூலித் தொழிலாளி பலியானார். அவரது தாய், தங்கை ஆகியோர் படுகாயமடைந்தனர்.

கேளம்பாக்கம் கூவத்தூர் அருகே பாலாறு கடல் முகத்துவாரத்தை கடக்க முயன்ற சங்கர் (38) என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். அவரது உடலை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே பூண்டி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து ரவி (54) என்பவர் இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சென்னாத்தூரில் தம்பி (33) என்பவர்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரத்தில் வீட்டு சுவர் இடிந்து சின்னையன் (வயது 60) என்பவர் பலியானார்.

தஞ்சையில் 3 பேர் பலி:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சிவகொல்லையில் கனமழைக்கு வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணேசன்(60), அவரது மனைவி ஸ்ரீரங்கம் 50) மற்றும் அவர்களது மகள் ராதிகா(18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி - திண்டுக்கல் சாலை துண்டிப்பு:

திருச்சி அருகே உள்ள தீரன் நகர் பகுதியில் உள்ள திருச்சி-திண்டுக்கல் சாலையில் மழை வெள்ளத்தால் சாலை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டு திருச்சி-திண்டுக்கல் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி குடியிருப்புகளில் வெள்ளம்:

நாகை மாவட்டத்தில் உள்ள சுனாமி தற்காலிக குடியிருப்புகளில் வெள்ளம் போல மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

வீடுகளுக்குள் இருக்க முடியாமல் குழந்தைகளுடன் இரவு முழுவதும் அவர்கள் வெளியில் தங்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குடியிருக்கவே முடியாத அளவுக்கு குடியிருப்புப் பகுதி உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களை மீட்க வேண்டும் எனவும் அவர்கள் குமுறியுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், கன மழையால் தடுமாறி தாறுமாறாக ஓடிய ஒரு பேருந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.

காவிரி பயிர்கள் மூழ்கின:

வெளுத்துக் கட்டிய மழை காரணமாக காவிரி பாசனப் பகுதி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை, ஓரத்தநாடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன.

பெரம்பலூரில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப் பயிர்கள் இந்த பருவம் தப்பிய மழையால் அழுகி விடும் என்று அம்மாவட்ட விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தொடர் மழை மட்டுமல்லாமல், பல இடங்களில் கடல் கொந்தளிப்புகளும் காணப்பட்டன. இதனால் மீனவர்களும் மீன் பிடிக்கப் போகாமல் மீன் பிடித் தொழிலும் கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில்தான் பாதிப்பு மிக மிக அதிகம்.

கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 11 செ.மீ., அண்ணாமலைநகரில் 10, பரங்கிப்பேட்டையில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ரயில்கள் தாமதம்:

கன மழையால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லைக்குக் கிளம்பிச் சென்ற பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் மிக மிக மெதுவாக சென்று கொண்டுள்ளன.

இதன் காரணமாக இந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னைக்குக் கிளம்பிய தென் மாவட்ட ரயில்கள் பலவும் கூட இதே காரணத்தினால் இன்னும் சென்னைக்கு வந்து சேரவில்லை.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தொடர்ந்து பெய்து வரும் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வி இயக்குநரகம் நேற்று இரவு வெளியிட்டது.

2 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

இதற்கிடையே இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+