பாளை. பஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று?
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று பெரும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்தை நியமிக்கவும் தீர்மானித்துள்ளது. ஆனால் அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மக்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது.
நெல்லை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டையை அடுத்துள்ள வேய்ந்தான் குளத்தில் சுமார் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பராமரிப்பு பணியை கவனிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் தான் பேருந்து நிலையம் உள்ளது.
நாறும் கழிப்பிடம்:
கட்டண கழிப்பிடம் என்று சொல்லப்பட்டாலும் உள்ளே செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
மேலும் ஹோட்டல், டீக்கடை போன்றவற்றில் இருந்து கொட்டப்படும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் நாலாபுறமும் சிதறி கிடப்பதால் பன்றி, நாய் போன்ற பிராணிகள் கூட்டம் கூட்டமாக விசிட் அடித்து, பயணிகளை பீதியடையச் செய்கின்றன.
கொசுக்களின் கோரக் கடி!
இப்படி அசுத்தமும், குப்பையும் கோலாகலமாக இருப்பதால் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து பயணிகளை மிரட்டி வருகிறது. கொசுக்கடி தாங்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பிளாட்பாரங்களில் ஆங்காங்கே உடைப்புகள் உள்ளதால் ஹை ஜம்ப் மற்றும் லாங் ஜம்ப் தெரிந்தவர்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும். காரணம் தொடர்ந்து நடக்க முடியாது. குதித்து குதித்துத்தான் பிளாட்பாரத்தில் நடக்க முடியும்.
'பாச'த் தண்ணீர்!
குடிதண்ணீருக்காக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டேங்கினை சுற்றிலும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதைப் பார்ப்பவர்கள் தாகம் போய், வேகமாக ஓடிப் போய் விடுகிறார்கள்.
வர்த்தக நிறுவனங்களுக்கு தனியாக தண்ணீர் இணைப்பு இருந்தும் பெரும்பாலான நேரங்களில் பயணிகளுக்கு இடைஞ்சல் அளிக்கும் வகையில் குடங்களை வரிசையாக வைத்து விடுகின்றனர்.
மழைக்காலங்களில் பஸ் நிற்கும் ஷெல்டருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும். இதில் கழிவுகளும் சேர்ந்து விடுவதால் பயணிகள் படும் சிரமம் சொல்லி மாளாது.
இப்படி தரத்துடன் புதிய பஸ் நிலையம் உள்ள நிலையில், அதற்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெறும் முயற்சியில் நெல்லை மாநகராட்சி இறங்கியிருப்பது, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications