ராஜீவ்- பெனாசிர்: ஒரு சோக ஒற்றுமை!
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கும், பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரது அரசியல் வாழ்க்கையும், முடிவும் ஒரே மாதிரியாகவே இருந்தது ஆச்சரியகரமான ஒரு சோக ஒற்றுமையாகும்.
இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட தலைவர் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட்டது. அதேபோல பாகிஸ்தானின் ஆணித்தரமான தலைவராக பார்க்கப்பட்டவர் பெனாசிர் பூட்டோ. அவரது ஆட்சிக்காலத்தில் பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இருவருமே பாரம்பரியமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். தாயார் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர் ராஜீவ் காந்தி. அதேபோல, தந்தை சுல்பிகர் அலி பூட்டோ தூக்கில் போடப்பட்டதைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர் பெனாசிர் பூட்டோ.
ராஜீவ் காந்தியும் சரி, பெனாசிர் பூட்டோவும் சரி நன்கு படித்தவர்கள். வெளிநாட்டில் படித்தவர்கள்.
இருவரும் ஒரே போல மிகப் பெரிய ஊழக்கில் சிக்கி சர்ச்சைக்கு ஆளானார்கள். ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழல் வழக்கு துரத்தியது என்றால், ஸ்விட்சர்லாந்து நிறுவனத்திடமிருந்து பெரும் பணத்தை பெனாசிர் வாங்கியதாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சை எழுந்தது.
இருவரது அரசியல் வாழ்க்கையும் ஏகப்பட்ட தடுமாற்றங்களை கொண்டிருந்தவை. இருவருமே அவரவர் காலத்தில் இரு நாடுகளிலும் புகழ் பெற்ற தலைவர்களாக விளங்கியவர்கள்.
இருவரின் முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையே. 1991ல் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார். அப்போது இந்தியாவில் தேர்தல் காலம்.
இப்போது தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், மனித வெடிகுண்டுக்கும் பெனாசிர் பலியாகியுள்ளார். இப்போது பாகிஸ்தானில் தேர்தல் காலம்.
காலம் காவு வாங்கிய இரு பெரும் தலைவர்களும் பதித்து விட்டுச் சென்ற முத்திரைகள் காலம் கடந்தும் மறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications