புதுப் பாதையில் ஐ.டி நிறுவனங்கள்
பெங்களூர்: ஊழியர்களின் நலனைக் கருதியும், வேலையில் புதுத்துணர்ச்சியுடன் ஊழியர்கள் ஈடுபடும் பொருட்டும் புதுப் புது வித்தியாசமான வழிமுறைகளை தகவல் தொடர்பு நிறுவனங்கள் கையாளத் தொடங்கியுள்ளன. இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு ஊழியர்களிடையே நல்ல ஆதரவும் காணப்படுகிறது.
ஐடி ஊழியர்களிடையே மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு என ஏகப்பட்ட சிக்கல்கள் பரவி வருவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இதைத் தவிர்க்க ஐடி நிறுவனங்கள் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்து ஊழியர்களின் மன இறுக்கத்தை தளர்த்தி வேலையில் நிம்மதியாகவும், உடல் நலக்குறைவு இல்லாமலும் பணியாற்ற வசதிகளைச் செய்து தர ஆரம்பித்துள்ளன.
தற்போது மேலும் ஒரு படி போய் புதுப் புது உத்திகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன ஐடி நிறுவனங்கள்.
வீட்டிலிருந்து பணியாற்றுவது, தளர்த்தப்பட்ட பணி நேரம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஒரு புதிய நடைமுறையை தனது நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூர் புறநகரில் வியாபித்து, விரிவடைந்த தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இன்போசிஸ், நகரின் மையப் பகுதியான எம்.ஜி.சாலையில் புதிய அலுவலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த அலுவலகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இளம் தாய்மார்கள் மற்றும் கர்ப்பம் தரித்துள்ள பெண் ஊழியர்கள் மட்டுமே இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து, நீண்ட தூரம் பயணம் செய்து, அலுவலகத்திற்கு வரும் சிரமம் புதிதாக தாயாராக ஆன பெண் ஊழியர்களுக்கும், கர்ப்பம் தரித்துள்ள பெண் ஊழியர்களுக்கும் குறையும். நீண்ட தூர பயணத்தைத் தவிர்ப்பதால் உடல் மற்றும் மனச் சோர்வின்றி அவர்கள் பணியாற்ற முடியும். சீக்கிரமாகவே வீடு திரும்ப முடியும். இதனால்தான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் கூறுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் 80 ஆயிரம் ஊழியர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு விசேஷமாக, மனைவியர் கர்ப்பம் தரித்தால், அவர்களின் கணவர்களுக்கு விடுமுறை விடப்படுவது இன்போசிஸில் மட்டுமே இப்போது நடைமுறையில் உள்ளதாம். இந்த திட்டத்திற்கு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது.
இதேபோல யுனிசிஸ் மற்றும் ஹைதராபாத்தின் ஏடிபி ஆகிய நிறுவனங்களும் இதுபோன்ற வித்தியாசமான நடைமுறைகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் தங்களது தலைமை அலுவலகம் தவிர வேறு நகரங்களிலும் சிறு சிறு அலுவலகங்களை நடத்தி ஊழியர்களை இலகுவான மனநிலையுடன் பணியாற்ற வழி செய்துள்ளன.
அதிலும் யுனிசிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சொந்த ஊரிலிருந்து பணியாற்றுவது என்ற நடைமுறைக்கு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாம்.
இதன் மூலம் சொந்த ஊர்களை விட்டு வேலை நிமித்தமாக, வேறு வழியில்லாமல் பெருநகரங்களுக்கு வந்து வசித்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது இந்தத் திட்டம்.
இதுகுறித்து யுனிசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி முகுல் அகர்வால் கூறுகையில், கடந்த 6 மாதங்களில் 50 முதல் 60 ஊழியர்கள் வரை இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர். மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், தாவணகரே, திருச்சி, விசாகப்பட்டனம், புனே, சிக்மகளூர், டெல்லி ஆகிய நகரங்களில் முழு நேர ஊழியர் யுனிசிஸுக்கு உள்ளனர். பெங்களூர் மற்றும் அமெரிக்காவில் தற்காலிக ஊழியர்கள் உள்ளனர் என்றார்.
மா போய் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பாலாஜி கூறுகையில், பல நிறுவனங்கள் 50 வயதுக்கு மேற்பட்டோரை பணியில் அமர்த்த ஆர்வம் காட்டுகின்றன என்றார்.
ட்யூட்டர்விஸா என்கிற ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் சராசரி பணியாளர் வயதே 50 தானாம். இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்தபடி பாடம் நடத்துகிறது. இந்த நிறுவனத்தில் 500 பணியாளர்கள் உள்ளனர்.
பெருநகரங்களில் இல்லாமல், 2ம் நிலை நகரங்களில்தான் இந்த நிறுவனத்தின் ஆசிரியர்கள் உள்ளனர். அமெரிக்கக் குழந்தைகளுக்காக அதிகாலை 3 மணிக்கே படு சுறுசுறுப்பாக பாடம் நடத்தி அசத்துகிறார்களாம் இவர்கள்.
ஆட் அஸ்ட்ரா நிறுவனர் நிரூபமா கூறுவது மிகுந்த சிந்தனைக்குரியது. எதிர்காலத்தில் அனைத்துப் பணியாளர்களுமே வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் நிலை வரப் போகிறது. அதை தவிர்க்க முடியாது. காரணம் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி. வீடியோ கான்பரன்ஸ் இதற்கு பெரிதும் உதவும்.
ஆலோசனைகள், ஆய்வுக் கூட்டங்களுக்காக அனைவரும் நேரில் வந்து அமர வேண்டிய அவசியம் இல்லை. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
எனவே எதிர்காலத்தில் வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் கலாச்சாரம்தான் மிகப் பெரிய விஷயமாக இருக்கும் என்கிறார் நிரூபமா.












Click it and Unblock the Notifications