1000 புது மினி பஸ் ரூட்கள் - அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகள் செல்லாத ஊர்களில் மினி பஸ்களை இயக்கவும், இதற்காக 1000 புதிய வழித் தடங்களுக்கு அனுமதி வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மினி பஸ் திட்டம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அரசு பஸ்களையே பார்த்திராத பல ஊர்களுக்கு மினி பஸ்ஸால், பெரும் பலன் கிடைத்தது.
அதுவரை ஆட்டோக்களுக்கு கொட்டி அழுது வந்த மக்களுக்கு இந்த மினி பஸ் திட்டம் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தது. சென்னையைத் தவிர தமிழகத்தின் இதர பகுதிகளில் இந்த மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இருப்பினும் மினி பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனவே மினி பஸ் திட்டத்தை விரிவுபடுத்தி மக்களுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிதாக 1000 வழித்தடங்களில் மினி பஸ்களை அறிமுகப்படுத்த தமிழக அரசின் போக்குவரத்து துறை அரசுக்கு திட்ட அறிக்கையை கொடுத்துள்ளது.
அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது அமலுக்கு வரும். புதிய மினி பஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்கள், சிறு நகரங்கள் இணைக்கப்படும். இதன் மூலம் அரசு பஸ்கள் செல்லாத பல ஊர்களின் மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும்.
மேலும் தற்போது உள்ளைப் போல இல்லாமல், வழித்தடங்களை அரசே உருவாக்கிக் கொடுக்கும். அதிலிருந்து பேருந்து அதிபர்கள் தங்களுக்குத் தேவையான வழித்தடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைகளும் இனி செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications