காங்கிரஸ் என்றாலே அது வாசன் தான்- 'மயூரா' ஜெயக்குமார்
மதுரை: தமிழக காங்கிரஸ் என்றாலே அது ஜி.கே.வாசனைத்தான் குறிக்கும் என்று சமீபத்தில் சத்யமூர்த்தி பவனில் கத்தியால் குத்தப்பட்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் 43 வது பிறந்த தின விழா நடந்தது. இதில் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். வாசன் புகழாரமாகவே அவரது பேச்சு இருந்தது. திமுக அரசையும் அவர் பாராட்டத் தவறவில்லை.
மயூரா பேசுகையில், தன்னை நம்பி இருப்பவர்களுக்கு ஜி.கே.வாசன் எப்போதும் துணை இருப்பார் என்பதை என்னை சிலர் சத்திய மூர்த்தி பவனில் தாக்கிய பிறகு தான் உணர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்றால் அது ஜி.கே வாசன் தான்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. அந்த ஆட்சியை நாங்கள் மதிக்கிறோம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளை தமிழக அரசு தட்டிக் கேட்க வேண்டும்.
தமிழக மக்களுக்காக அரசு சேது சமுத்திர திட்டம், தங்க நாற்கர திட்டம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து முதலியவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சிலர் மதத்தின் பெயரால் எதிர்க்கின்றனர். நாங்களும் இந்துக்கள் தான். ஆனால் திட்டம் நிறைவேற குறுக்கே நிற்பது கிடையாது என்றார் அவர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி .ராம்பாபு, மாநகர் காங்கிரஸ் தலைவர் தெய்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications