ராமதாஸுடன் இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் சந்திப்பு
சென்னை: இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால்தான் தீர்வு ஏற்படும் என்று இலங்கை சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இலங்கை சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான அமைச்சர் சந்திரசேகரன் இன்று காலை சென்னை வந்தார். தி.நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது, அதற்குரிய அழுத்தத்தை தர வேண்டும்.
இந்தியாவால் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அதற்கான வழிகள், வல்லமை, வாய்ப்பு ஆகியவை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது. இதனை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். அனைத்து தலைவர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே இனியும் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே இந்தியாவின் உடனடி தலையீடு அவசியம். தமிழர்களின் துயரங்களுக்கு முடிவு காண வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதே எதிர்பார்ப்பில்தான் இலங்கைத் தமிழர்களும் உள்ளனர்.
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை ரத்து செய்துள்ளது, தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது மனித உரிமையை மீறிய செயலாகும். உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தைத்தான் விரும்பு கின்றன.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்து பேசிய நான், இன்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினேன். இன்று மாலை தி.க. தலைவர் வீரமணியை சந்திக்க உள்ளேன். முதல்வரை சந்திக்கவும் அனுமதி கேட்டிருக்கிறேன். அனுமதி கிடைத்தவுடன் அவரையும் சந்திப்பேன் என்றார் அவர்.
டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு ஒரு தீர்வை காண வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதன்மூலம் அவரது ஆட்சிகாலத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட்ட பெருமை அவருக்கு கிடைக்கும். மேலும் அவர் மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications