திகில் பூங்காக்களாகும் தீம் பார்க்குகள்

சென்னை: சென்னையைச் சுற்றிலும் பொழுது போக்கு பூங்காக்கள் என்ற பெயரில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க்குகள், உயிர் நீக்கும் பூங்காக்களாக மாறி மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றன. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதவரை இங்கு உயிர்ப்பலி நடப்பது தொடர் கதையாகத்தான் இருக்கும் என மக்கள் குமுறுகிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமான ஒரு பெயர் விஜிபி கோல்டன் பீச். வங்கக் கடலோரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில், ஈஞ்சம்பாக்கம் என்ற கிராமத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதலாவது அம்யூஸ்மென்ட் பார்க்தான் விஜிபி கோல்டன் பீச்.
சென்னைக்கு வருகிறவர்கள் தவறாமல் வந்து போகும் இடமாக விஜிபி இருந்தது. இப்போது விஜிபி கோல்டன் பீச் தனது பெயரை மாற்றிக் கொண்டு காலத்திற்கேற்ப நவீன அம்சங்களுடன் தொடர்ந்து மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் சென்னையைச் சுற்றிலும் ஏராளமான அம்யூஸ்மென்ட் பார்க்குகள் வந்து விட்டன. எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்ட், குயீன்ஸ்லேண்ட் என சரசரவென ஏகப்பட்ட பொழுது போக்கு பூங்காக்கள்.
எல்லாவற்றிலும் மிகக் கடுமையான அளவுக்கு பணத்தை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கிறார்கள். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் ஏதேனும் உருப்படியாக இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவில் ராட்சத ராட்டினத்தின் இருக்கை கீழே விழுந்து ஒரு இளம்பெண்ணின் இடுப்பு எலும்பு முறிந்து இன்றும் கூட நடக்க முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கிறார்.
அதே பொழுதுபோக்குப் பூங்காவில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் ஊழியையும் கூட இப்படித்தான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுது போக்குப் பூங்காவில் நடந்த படகு விபத்தில் அநியாயமாக 11 வயது சிறுமி அனுசுயாவின் உயிர் பறிபோயுள்ளது.
படகு நீரில் கவிழ்ந்து அந்த அப்பாவிச் சிறுமி உயிருக்குப் போராடியபோது யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. தீம் பார்க்கின் ஊழியர்கள் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. மீட்பு முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பணம் மட்டும்தான் எங்களது குறி, மற்றவை குறித்து எங்களுக்குக் கவலை இல்லை என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டனர்.
அங்கு நடந்த அந்த பயங்கரச் சம்பவம் குறித்து அனுசுயாவின் தந்தை ராஜு கண்ணீர் மல்கக் கூறுகையில், குயீன்ஸ்லேண்ட் செல்ல வேண்டும் என்று குழந்தைகள் அடம் பிடித்தனர். இதுவரை பார்க்காத இடம் என்பதால் நானும் மனைவி குழந்தை களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றேன். நாங்கள் அனைவரும் சந்தோஷமாக படகில் உல்லாச சவாரி சென் றோம். எங்களது படகில் 10 பேருக்கும் மேல் இருந்தனர்.
மதியம் 12 மணி இருக்கும் நாங்கள் சென்ற படகு ஏரியை ஜெட் வேகத்தில் சுற்றி விட்டு திரும்பியது. 3 கி.மீ. தூரமுள்ள ஏரியை 5 நிமிடத்தில் சுற்றி காண்பித்து விட்டனர். அவ்வளவு வேகம்.
இந்த நேரத்தில் தான் இடி இடித்தது மாதிரி பலத்த சத்தத்துடன் பின்னால் வந்த படகு, நாங்கள் இருந்த படகில் வேகமாக மோதியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு தூக்கி வீசப்பட்டோம்.
கொஞ்ச நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தண்ணீரில் தத்தளித்த நான் ஒரு வழியாக எனது மூத்த மகளை தூக்கினேன். ஆனால் எனது இளைய மகள் அனுசுயா மட்டும் படகு கவிழ்ந்த வேகத்தில் அதன் அடியில் சிக்கிக்கொண்டாள்.
இந்த நேரத்தில் எனது மகளை காப்பாற்ற பூங்கா ஊழியர்கள் யாரும் முன் வரவில்லை. படகு டிரைவர் உள்பட அனைவரும் ஓடி விட்டனர். அருகில் இருந்தவர்கள் துணையுடன் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் அனுசுயாவை தண்ணீரில் இருந்து மீட்டோம்.
மயக்க நிலையில் இருந்த அவளுக்கு உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றிருக்கலாம்.ஆனால் அதற்குண்டான எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. முதல் உதவி செய்வதற்கு கூட ஆள் இல்லை.
பூங்காவில் இருந்து எனது மகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வாகன வசதி கூட இல்லை. அதைக் கூட குயீன்ஸ்லேண்ட் நிர்வாகம் தரவில்லை. இதனால் படபடப்புடன் அனுசுயாவை தூக்கி தோளில் போட்டப்படியே 4 கி.மீ. தூரம் ஓடினேன். அதன் பிறகே மெயின் ரோட்டை பிடிக்க முடிந்தது.
பின்னர் அங்கிருந்து அனுசுயாவை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது மணி 2 ஆகி விட்டது. 12 மணிக்கு தண்ணீரில் விழுந்த எனது மகளை 2 மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிந்தது. இதனால் தான் எனது மகளை காப்பாற்ற முடிய வில்லை என்ரார் ராஜு.
ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டு விட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு தீம் பார்க்குகளில் இருக்க வேண்டும். அனைத்து தீம் பார்க்குகளுமே நகரத்தை விட்டு தொலைவில் இருப்பதால் ஆம்புலன்ஸ்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வாகன வசதி செய்து தர வேண்டும். அதற்கான செலவையும் சம்பந்தப்பட்ட தீம் பார்க்குகளே ஏற்க வேண்டும்.
டிக்கெட் கட்டணம் என்ற பெயரில் அநியாய பணக் கொள்ளையில் ஈடுபடுவதை நிறுத்தி, நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மக்கள் எழுப்புகிறார்கள்.
அரசு கவனிக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீம் பார்க்குகள் என்ற பெயரில் உயிர்களுடன் விளையாடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுசுயா மாதிரி இன்னும் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications