வெள்ளையர் நுழைந்ததால் குருவாயூர் கோவிலில் புனிதப்படுத்தும் பூஜை
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குள் இங்கிலாந்தைச் சேர்ந்த பக்தர் நுழைந்ததால், கோவில் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி புனிதப்படுத்தும் பூஜை நடத்தப்பட்டது.
குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
ஆனால் இந்துக்கள் அல்லாதோரை குருவாயூர் கோவில் நிர்வாகம் கோவிலுக்குள் விடுவதில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பக்தர் கோவிலுக்கு வந்தார். அவரை கோவில் பூசாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்துக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என அவர்கள் கூறினர்.
ஆனால் தான் இந்து மதத்தை தழுவி விட்டதாகவும், தனது பெயரை பிரணவாஹி என மாற்றியுள்ளதாகவும் கூறி திருவனந்தபுரம் ஆர்ய சமாஜம் வழங்கிய சான்றிதழையும் காட்டினார்.
அப்படியும் அவரை சாமி கும்பிட பூசாரிகள் அனுமதிக்கவில்லை. திருவனந்தபுரம் ஆர்யசமாஜம் கொடுக்கும் சான்றிதழ்களை நாங்கள் ஏற்க மாட்டோம். கோழிக்கோடு கிளை ஆர்யசமாஜம் கொடுக்கும் சான்றிதழைத்தான் நாங்கள் ஏற்போம் என்று கூறினர்.
இதனால் அந்த பக்தர் சாமி கும்பிட முடியாமல் திரும்ப நேரிட்டது. அவர் போன பின்னர் கோவிலை சுத்தப்படுத்தப்படும் புன்யாஹம் என்ற பரிகாரப் பூஜையை நடத்த கோவில் தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி புன்யாஹம் செய்யப்பட்டதாம்.
கேரளாவில் உள்ள முக்கியமான சில கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை நுழைய அனுமதி மறுப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்பு நடிகை மீரா ஜாஸ்மின் அம்மன் கோவில் ஒன்றுக்கு சாமி கும்பிடச் சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்தக் கோவில் புனிதப்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
கே.ஜே.ஏசுதாசுக்கு மறுப்பு:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காடம்புழா தேவி கோவிலுக்குச் சென்ற பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஏசுதாஸை கோவிலுக்குள் நுழைய விடாமல் அவமதித்து திருப்பி அனுப்பியது கோவில் நிர்வாகம்.
இதனால் அம்மனை தரிசிக்க முடியாமல் வருத்தத்துடன் திரும்பினார் ஏசுதாஸ்.
அதேபோல குருவாயூர் கோவிலுக்கும் ஏசுதாஸ் வரக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்தது நினைவிருக்கலாம்.
சபரிமலை அய்யப்பன் குறித்தும், கிருஷ்ணர் குறித்தும் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ஏசுதாஸ். அவரது பாடல்கள்தான் இன்றளவும் கேரளாவில் மட்டுமல்லாது, தென் மாநிலங்களில் பிரபலமாக உள்ளன.
குறிப்பாக அய்யப்பன் குறித்து ஏசுதாஸ் பாடிய பாடல்கள்தான் தென் மாநிலங்களில் அய்யப்ப பக்தர்களிடையே பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட ஏசுதாஸுக்கே கேரள கோவில்களில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications