2011ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்

புதுச்சேரி: திமுக அரசுக்கு குருட்டுத்தனமான ஆதரவை பாமக வழங்காது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக, தனக்கு இஷ்டமான திட்டங்களை திமுக அரசு அமல்படுத்த முயன்றால் அதை பாமக தட்டிக் கேட்கும் என பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 நாட்கள் நடந்த பாமக செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பாமக மீதான மக்கள் நம்பிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே அதன் அடிப்படையில், 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பாமக தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைக்கப்படும்.
தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதை ஏற்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற பாமக தயாராகிக் கொண்டிருக்கிறது.
மதுவை ஒழிக்க கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பிப்ரவரி 26ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். மதுவால் ஏற்படும் தீமைகள், கொடுமைகள், சீரழிவுகளை மக்களிடையே பிரசாரம் செய்யவுள்ளேன். மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன்.
தமிழக விவசாயிகளின் நலனுக்காக அரசியல் சார்பற்ற தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தை பாமக உருவாக்கியுள்ளது. இந்தக் குழு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உழவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக பாடுபடும்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். யார் இங்கு முதல்வராக இருந்தாலும் அவருக்கு பாமக ஆதரவைத் தரும் என்றார் ராமதாஸ்.
முன்னதாக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான விவரங்கள்:
- நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதுவே ஒரே வழி. இதற்கு முன்னோட்டமாக, மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நிதியுதவியை தாராளமாக வழங்க வேண்டும்.
- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட்டு அங்கு பெரும் பரிதவிப்பில் இருக்கும் தமிழர்கள் நிம்மதி பெறும் வகையிலான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேம்டும். இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும் இந்தியா அளிக்கக் கூடாது.
- மலேசியாவில் வசிக்கும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- திமுக அரசுக்கு 5 ஆண்டு காலம் ஆதரவு தருவது என்ற பாமகவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீண்டும் உறுதி செய்கிறோம்.
- திமுக அரசுக்கு குருட்டுத்தனமான ஆதரவை பாமக வழங்காது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக, தனக்கு இஷ்டமான திட்டங்களை திமுக அரசு அமல்படுத்த முயன்றால் அதை பாமக தட்டிக் கேட்கும்.
- ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை பாமக கண்டிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் வகையிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வலியுறுத்துகிறோம்.
- தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
- காரைக்கால் பிராந்தியத்தை பிற்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்.
- தமிழை மத்திய ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் உயர்வுக்காக சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
- அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications