தெல்கிக்கு 10 ஆண்டு சிறை-சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil


சென்னை: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.3 கோடி அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான அப்துல் வாகீத், பாலாஜி, ஜேக்கப் சாக்கோ ஆகிய மூவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பீட்டர் கென்னடி என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடந்தது. அனைத்து வழக்குகளிலும் தெல்கிதான் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளாக தெல்கி, அப்துல் வாகீத், பாலாஜி, ஜேக்கப் சாக்கோ, பீட்டர் கென்னடி, முன்னாள் டிஐஜி முகமது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்ஐசி அதிகாரி ராமசாமி சாது, நிஜாமுதீன், அவரது மனைவி நஸ்நீன் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

விசாரணையின்போது, சர்பிரஸ் நவாஸ் என்பவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.வேலு தீர்ப்பளித்தார்.

வழக்கின் முக்கிய குற்றவாளிகளான தெல்கி, அப்துல் வாகீத், ஜேக்கப் சாக்கோ ஆகிய மூன்று பேரும் புனேவில் நடைபெற்ற முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் எரவாடா சிறையில் இருக்கும் அவர்கள் மூவரிடம் நீதிபதி என்.வேலு விசாரணை நடத்தி வந்தார். இதில் அவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக தெரிவித்தனர்.

இன்று இவ்வழக்கில் 5 பேருக்கு நீதிபதி வேலு தீர்ப்பு வழங்கினார். மோசடி, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

முக்கிய குற்றவாளியான தெல்கிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.

அப்துல் வாகீத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் கட்டத் தவறினால் 18 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

பாலாஜிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 கோடி அபராதமும், கட்டத் தவறினால் இரண்டு வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

பீட்டர் கென்னடிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் கட்டத்தவறும் பட்சத்தில் பதிமூன்றரை மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ஜேக்கப் சாக்கோவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், கட்டத் தவறும் பட்சத்தில் 18 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென் நீதிபதி தெரிவித்தார்.

முத்திரைத்தாள் மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குளோபல் டிரஸ்ட் வங்கியில் முதலீடு செய்து அதன் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது அந்த வங்கி கணக்கை சிபிஐ போலீசார் முடக்கம் செய்தனர்.

அப்போது அந்த வங்கி கணக்கில் ரூ.28 லட்சம் இருப்பில் இருந்தது. அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் ஏக காலத்தில் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், எரவாடா சிறையில் அனுபவிக்கும் தண்டனையோடு சேர்த்து இந்த தண்டனை காலம் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத முகமது அலி, சங்கர், ராமசாமி சாது, நிஜாமுதீன், நஸ்நீன் ஆகிய 5 பேர் மீதான வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+