கூட்டணி தர்மம்-திமுக மீது காங். மறைமுக தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்துதான் போட்டியிட வேண்டும். அடுத்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகளுக்காக இனியும் காங்கிரஸ் தொண்டர்கள் ரத்தம் சிந்தக் கூடாது என்று திருச்சியில் நடந்த காங்கிரஸ் மண்டலக் கூட்டத்தில் முன்னணி தலைவர்கள் பேசினர்.

திருச்சியில் மண்டல காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் கட்சி மேலிடப் பார்வையாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான அருண்குமார் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மட்டும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

சோனியாவுக்கு நிகர் இல்லை-இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், வாசன் வராததுதான் ஒரு குறை. கூட்டம் முடிவதற்குள் அவர் வந்து விடுவார். சோனியா காந்திக்கு நிகரான தலைவர் இன்று இந்தியாவில் யாரும் இல்லை.

அடுத்து நமது தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி மலர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் அடுத்து நமது ஆட்சிதான் என்றார்.

எம்.எல்.ஏ.வும், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராஜசேகரன் மிகவும் ஆவேசமாக பேசினார். திமுகவை மறைமுகமாக அவர் தாக்கினார். அவர் பேசுகையில், 90 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு ஆட்சி நடத்துகிறார்கள். நாம் அவர்களுக்கு 7 மத்திய அமைச்சர் பதவிகளையும் கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிப்படிதான் இங்கு ஆட்சி நடக்கிறதா?. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அதன்படிதான் ஆட்சி நடக்கிறதா?.

நமது உழைப்பு வீண் போகக் கூடாது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரின் உயிரை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். ஆனால் தமிழகத்தில் இன்று எல்லாத் திட்டமும் தன்னிச்சையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தான் கூட்டணி தர்மம் என்கிறார்களா?.

1989லிருந்தே நாம் தொடர்ச்சியாக தனித்து நின்றிருக்க வேண்டும். அன்று முதல் தனித்து நின்றிருந்தால் இந்நேரம் ஆட்சியைப் பிடித்திருக்கலாம். நமது உழைப்பை திராவிடக் கட்சிகள் சுரண்டி விட்டன. நமது ரத்தத்ைத அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் இனியும் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. நமது தொண்டர்கள் சிந்தும் ரத்தம் இனி காங்கிரஸுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்றார் ராஜசேகரன்.

யசோதாவுக்கு எதிர்ப்பு:

இவர்கள் இருவரும் தனித்து நிற்போம், ஆட்சியைப் பிடிப்போம் என்ற ரீதியில் பேச சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா, வாசன் ஆதரவாளர்களை ஒரு பிடி பிடித்தார். திமுகவுக்கு சாதகமாக பேசினார். யசோதா பேசுகையில்,

நாம் தனித்து நிற்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சிலர் பேசினார்கள். முதலில் நமக்கு அந்தப் பலம் இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். தைரியம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இங்கே சிலர் ஜி.கே.வாசன் படம் போட்ட பனியனை அணிந்து வந்துள்ளனர். அவர்கள் வாசன் படத்தைத் தாராளமாக போட்டுக் கொள்ளட்டும். ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தி படத்தை போட்டிருக்க வேண்டாமா. அவரை முன்னிருத்தியிருக்க வேண்டாமா என்று ஆவேசமாக கேட்டார்.

இதையடுத்து யசோதாவை எதிர்த்து வாசன் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைப் பார்த்து யசோதாவும் சத்தம் போட்டார். பின்னர் தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் அமைதிப்படுத்தினர்.

இருப்பினும் யசோதா பேசக் கூடாது என்று வாசன் ஆதரவாளர்கள் தொடர்ந்து சத்தம் போட்டபடி இருந்ததால் அவர் தனது பேச்சை நிறுத்தி விட்டு போய் அமர்ந்து கொண்டார். பின்னர் ப.சிதம்பரம் பேசினார்.

மாநாடுகள் நடத்துவோம்-ப.சிதம்பரம்

நாகர்கோவிலில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதி பெரும் அதிருப்தி தெரிவித்திருந்ததால், நேற்றைய கூட்டத்தில் சிதம்பரம் பட்டும் படாமலும் பேசினார்.

அவர் கூறுகையில், பட்ஜெட்டுக்குப் பின்னர் எனக்கு டெல்லியில் வேலை அதிகம் இருக்காது. கட்சியை தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன.

மாவட்டந்தோறும் நாம் மாநாடுகளை நடத்த வேண்டும். குறைந்தது 5 மாநாடுகளையாவது நாம் நடத்த வேண்டும். லட்சம் தொண்டர்களை மாவட்டந்தோறும் கூட்ட வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியாக மாநாடு நடத்த வேண்டும். காங்கிரஸ் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் நான் பேச வருகிறேன். போராட்டம் நடத்தினாலும் அதற்கும் வர நான் தயாராக இருக்கிறேன். 2008ம் ஆண்டு முடிவதற்குள் நமது கட்சியை கூர்மையான கருவியாக மாற்றியாக வேண்டும். அதற்கு அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

கிருஷ்ணசாமி ஆதங்கம்:

இப்படி தனித்து ஆட்சி அமைப்போம் என்று ஒரு தரப்பும், அதற்கெல்லாம் நம்மிடம் தெம்பு இருக்கிறதா என்று இன்னொரு தரப்பும் பேசிக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தனது கவலையை வெளிப்படுத்திப் பேசினார்.

கிருஷ்ணசாமி பேசுகையில், இங்கே வந்துள்ள சில தலைவர்கள் (சிதம்பரம் உள்பட) சத்தியமூர்த்தி பவனுக்கே வருவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் நாம் எப்படி காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும். நான் காமராஜர் ஆட்சியைப் பார்த்தவன்.

இப்போது கட்சி கெட்டுப் போய் விட்டது என்று நான் கூற மாட்டேன். நமக்குள் முதலில் ஒற்றுமை வேண்டும். சில மாவட்டத் தலைவர்கள் எனக்கே ஒத்துழைப்பு தருவதில்லை. அனைத்து மாவட்டத் தலைவர்களும் இணைந்து கூட்டம் போடட்டும். நான் கண்டிப்பாக வரத் தயார். முதலில் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம். அப்போதுதான் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என்றார்.

நடக்கிற காரியமா?-அருண்குமார் எதார்த்தம்!:

அனைவரும் பேசிய பின்னர் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் பேசுகையில், தனித்து போட்டியிட வேண்டும், தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். தொண்டர்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன், வரவேற்கிறேன்.

ஆனால் இதெல்லாம் உடனடியாக நடக்கிற காரியமா, என்ன? 1991ம் ஆண்டிலிருந்து நாம் திராவிடக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். 1996ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற தமாகாவும், திமுகவுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்றன.

1998ல் தனித்துப் போட்டியிட்டோம். ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேபோல 2003ல் தமாகா தனித்துப் போட்டியிட்டது. அதற்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

எனவே நாம் முதலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்போதுதான் தனித்து ஆட்சியமைப்பது சாத்தியமாகும். அப்படிப்பட்ட நிலையில் நாம் இருந்தால்தான் சத்தியமூர்த்தி பவனுக்கு கூட்டணிக் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வர வைக்க நம்மால் முடியும் என்று எதார்த்தமாக பேசினார்.

இக்கூட்டத்திற்குக் கடைசி வரை ஜி.கே.வாசன் வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+